மேற்கு வங்கம், பஞ்சாப் முரண் இண்டியா கூட்டணிக்கு பின்னடைவா?- சீதாராம் யெச்சூரி பேட்டி

By செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்த நகர்வு, ‘இண்டியா’ கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அளித்துள்ள பேட்டியிலிருந்து..

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் தங்கள் மாநிலங்களில் மக்களவைத் தேர்தலை தனித்து எதிர்கொள்ளப் போவதாகச் சொல்லி இருக்கிறார்கள். இது இண்டியா கூட்டணிக்கு பின்னடைவா? உங்கள் கருத்து என்ன?

ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனக்கான முடிவை எடுக்கும். அதில் கருத்து கூறும் நிலையில் நான் இல்லை. ஆனால், இந்த இரண்டு மாநிலங்களிலுமே இது எதிர்பார்க்கப்பட்டதுதான். இந்த நகர்வு நிச்சயமாக பின்னடைவு இல்லை. இந்தியாவின் ஜனநாயகம், மதச்சார்பற்றத் தன்மையைப் பாதுகாப்போம் என்பதில் நாங்கள் (இண்டியா கூட்டணி) உறுதியாக உள்ளோம். மேற்கு வங்கத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எங்களின் இலக்கு பாஜகவையும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியையும் வீழ்த்துவதாகவே இருந்தது. அதற்காக நாங்கள் காங்கிரஸுடம் கூட்டணி சேர்ந்தோம்.

திரிணமூல் காங்கிரஸ் எங்கள் மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மம்தா பானர்ஜி தீவிரவாத இயக்கம் என்றழைத்தார். அதைப் பற்றிய விவாதங்களை இப்போது வளர்க்க விரும்பவில்லை. அவர்கள் என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பது அவர்களுடைய சுய முடிவு. மேற்குவங்க இளைஞர்களின் பார்வை வேறாக இருக்கிறது. கடந்த ஜனவரி 8-ல் நடந்த பேரணி நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய வெற்றி.

பஞ்சாபை பொறுத்தவரை அங்கேயும் மேற்கு வங்கம் போல் சில அரசியல் சூழ்நிலைகள் இருக்கின்றன. எல்லோரும் ஓரணியில் திரண்டுவிட்டால் எதிர்ப்பலை என்பது எதிர்க்கட்சிக்கு (பாஜக, அகாலி தளம்) சாதகமாகிவிடும். ஒவ்வொரு மாநிலத்தின் பிரத்யேக அரசியல் களத்தைப் பொறுத்து தொகுதிப் பங்கீட்டில் சில மாறுதல்கள் இருக்கும். கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. இந்த நேரடிப் போட்டியின் காரணமாகத் தான் அங்கே பாஜகவால் ஒரே ஒரு சட்டப்பேரவைத் தொகுதியைக் கூட கைப்பற்ற முடியவில்லை.

கடந்த ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டன. ஆனால் 7 மாதங்களுக்குப் பிறகும் தொகுதிப் பங்கீட்டில் எந்த முன்னேற்றமும் இல்லை. இது நீண்ட தாமதம் இல்லையா?

பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. தொகுதிப் பங்கீடு என்பது மாநில அளவில் நடைபெற வேண்டியது. ஒவ்வொரு மாநிலத்திலும் நிலைமை வெவ்வேறாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி உள்ளது. பிஹாரில் மகாகத்பந்தன் உள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி இருக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இம்மாத இறுதிக்குள் தொகுதிப் பங்கீட்டு நிலவரம் நிச்சயமாக தெளிவு பெறும்.

இதுவரை இண்டியா கூட்டணி சார்பில் பொதுவாக ஒரு பேரணியோ, பொதுக்கூட்டமோ நடைபெறவில்லையே? இதுவும் தாமதம் தானே!

இண்டியா கூட்டணியின் முதல் ஆலோசனைக் கூட்டம் தொட்டே நான் இதனை வலியுறுத்தி வருகிறேன். இண்டியா கூட்டணியின் சார்பில் நாங்கள் பொதுக் கூட்டங்களை நடத்த வேண்டும், மாநில அளவில் தொகுதிப் பங்கீட்டை விரைந்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். இது இன்னும் நடைபெறவில்லை. பிப்ரவரியில் இதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என்று நாம் நம்புகிறேன்.

ராமர் கோயில் திறப்பு ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் மத்தியில் 2024 தேர்தல் பிரச்சாரத்தை எதிர்க்கட்சிகள் பலவீனமாகத் தொடங்குவதாக உணர்கிறீர்களா?

இது எதிர்பார்த்தது தானே. ராமர் கோயில் திறப்பை அவர்கள் தேர்தல் ஆதாயத்துக்காக பயன்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டுத்தானே செய்தார்கள். இது எங்களின் கருத்து மட்டுமே அல்ல. சங்கராச்சார்யர்கள் கூட ராமர் கோயில் திறப்பு நேரத்தை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கின்றனர். பாதி கட்டி முடிக்கப்பட்ட கோயிலுக்கு ஏன் குடமுழக்கு என்று அவர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

ராமர் கோயிலால் பாஜகவுக்கு கிடைக்கும் ஆதாயத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

இது இந்துத்துவாவை பலப்படுத்தும் செயல். நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அதன் பிரதிபலிப்பை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதில் இண்டியா கூட்டணிக் கட்சிகள் தெளிவாக இருக்கின்றன. இதனை வலிமையாக எதிர்கொள்ள வேண்டும். மதச்சார்பற்ற கோட்பாடுகளால் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும். மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகள் தான் முக்கியமானவை என்பதன் அடிப்படையில் எதிர்கொள்ள வேண்டும்.

ராமர் கோயில் திறப்பு உணர்வுப்பூர்வமாக மக்களை தொட்டிருக்கலாம். மக்கள் அவர்கள் விரும்பும் நம்பிக்கையைப் பின்பற்றலாம். ஆனால் இங்கே மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படி இருக்கிறது? உச்சபட்ச வேலைவாய்ப்பின்மை பிரச்சினையில் உள்ளோம். கட்டுக்கடங்கா விலை வாசி உயர்வு ஒருபுறம் வதைக்கிறது. நகரங்களில் இருந்து வாழ்வாதாரத்துக்காக கிராமங்களுக்கு மக்கள் செல்கின்றனர். தலைகீழான இந்த இடம்பெயர்வு எச்சரிக்கிறது. இதுபோன்ற வேளையில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மீது தொடர் தாக்குதலும் நடைபெறுகிறது. கிராமப்புற ஏழைகளின் ஒரே உயிர் வாய்ப்பு இத்திட்டம் தான்.

நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை என்றால், அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றியை என்னவென்று சொல்வீர்கள்?

இதில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அதன் முந்தைய வாக்குவங்கியை இழக்கவில்லை. பாஜக இம்மாநிலங்களில் பெற்றுள்ள அதிகப்படியான வாக்குகள் என்பது இந்துத்துவா வாக்குகள். கர்நாடகா, தெலங்கானா, இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸே வெற்றி பெற்றுள்ளது. ஆகையால் இந்திய வாக்காளர்கள் அனைவருமே ஒரு சார்பாக வாக்களிக்கவில்லை என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். இந்துத்துவா ஒருங்கிணைப்பு, அதற்கான எதிர்ப்பு என்று துருவப்படுத்துதல் நடந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு சீதாராம் யெச்சூரி அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

நேர்காணல்: சோபனா கே நாயர் - தி இந்து ஆங்கிலம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்