புதுடெல்லி: "ராமர் கோயிலின் கட்டுமானம் என்பது உரிய நீதித்துறை நடவடிக்கைகளுக்குப் பின், நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்ற முடிவுக்குப் பின் தொடங்கியது. இப்போது பிரம்மாண்டமான கட்டுமானமாக நிற்கும் இது, மக்களின் நம்பிக்கையை உரிய முறையில் வெளிப்படுத்துவதாக மட்டுமின்றி நீதித்துறை நடவடிக்கைகளில் மக்கள் கொண்டுள்ள மிகப் பெரும் நம்பிக்கையின் சான்றாகவும் இருக்கிறது" என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை: “75-வது குடியரசு தின விழா நாளில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.பல்வேறு பிரச்சினைகள் இருந்தபோதும் எவ்வளவு தூரம் நாம் பயணித்திருக்கிறோம் என்பதை நான் திரும்பிப் பார்க்கும்போது எனது மனம் பெருமிதத்தால் நிறைந்துள்ளது. குடியரசின் 75-வது ஆண்டு நாட்டின் பயணத்தில் பலவழிகளில் உண்மையிலேயே வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகும். சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை நாம் நிறைவு செய்தபோது நமது தனித்துவமான பெருமிதம் மற்றும் பன்முகக் கலாச்சாரத்தை சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவாகக் கொண்டாடியது போலவே இந்த விழாவும் குறிப்பிடத்தக்கதாகும்.
அரசியல் சாசனம் செயல்பாட்டுக்கு வந்ததை நாளை நாம் கொண்டாடவிருக்கிறோம். இதன் முகப்புரை, “இந்திய மக்களாகிய நாம்” என்ற வார்த்தைகளுடன் தொடங்குகிறது. இந்த ஆவணத்தின் மையப்பொருளான ஜனநாயகம் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவில் ஜனநாயக முறை என்பது மேற்கத்திய ஜனநாயகக் கோட்பாட்டை விட மிகவும் பழமையானது. இந்தியாவை “ஜனநாயகத்தின் தாய்” என்று அழைப்பதற்கு இதுவே காரணமாகும். நீண்ட, சிக்கலான போராட்டங்களுக்குப் பின் 1947 ஆகஸ்ட் 15 அன்று அந்நிய ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலைப் பெற்றது.
இருப்பினும் நாட்டை நிர்வகிப்பதற்கான கோட்பாடுகளையும், நடைமுறைகளையும் கட்டமைக்கும் பணியும், அதன் உண்மையான ஆற்றலை வெளிப்படுத்தும் பணியும் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. அரசியல் நிர்ணய சபை சுமார் 3 ஆண்டுகள் செலவிட்டு நிர்வாகத்தின் அனைத்து அம்சங்களையும் விரிவாக விவாதித்து நமது நாட்டின் மகத்தான அடிப்படை ஆவணமான இந்திய அரசியல் சட்டத்தைத் தயாரித்தது. நமது மிகச் சிறந்த ஊக்கம் தருகின்ற அரசியல் சட்டத்தை வடிவமைப்பதற்கு பங்களிப்பு செய்த தலைவர்களையும், அலுவலர்களையும் நாடு மிகுந்த நன்றியுடன் இன்று நினைவுகூர்கிறது.
சுதந்திரத்தின் நூற்றாண்டை நோக்கிய அமிர்த கால ஆண்டுகளின் தொடக்கத்தில் நாடு இருக்கிறது. ஒரு சகாப்த மாற்றத்திற்கான நேரம் இதுவாகும். நாட்டைப் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்ல ஒரு பொன்னான வாய்ப்பு நமக்கு வழங்கப்பட்டுள்ளது. நமது இலக்குகளை அடைவதற்கு ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பும் முக்கியமானதாகும். இதற்கு அரசியல் சட்டத்தில் வகுத்தளிக்கப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளை குடிமக்கள் அனைவரும் பற்றி நிற்க வேண்டுமென்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்தக் கடமைகள் சுதந்திரத்தின் 100 ஆண்டுகள் நிறைவடையும்போது வளர்ச்சியடைந்த தேசமாக பாரதத்தை மாற்றுவதற்கு ஒவ்வொரு குடிமகனின் முக்கியமான பங்களிப்பாகும். இந்தத் தருணத்தில் மகாத்மா காந்தியை நான் நினைத்துப் பார்க்கிறேன். “உரிமைகளை மட்டும் சிந்திக்கின்றவர்கள் உயர்வதில்லை. கடமைகளையும் சிந்திப்பவர்கள் மட்டுமே அந்த நிலையை அடைகிறார்கள்” என்று அவர் மிகச் சரியாகவே கூறினார்.
குடியரசு தினம் என்பது நமது அடிப்படை மாண்புகளையும், கோட்பாடுகளையும் நினைவுகூரும் தருணமாகும். இவற்றில் ஒன்றை நாம் சிந்திக்கும்போது மற்றொன்றுக்கு இயல்பாகவே வழிநடத்தப்படுகிறோம். ஜனநாயகம் என்பது பன்முகக் கலாச்சாரம், நம்பிக்கைகள், நடைமுறைகளைக் குறிக்கிறது. பன்முகத்தைக் கொண்டாடுவது சமத்துவத்தைக் குறிக்கிறது. இது நீதியால் நிலைநாட்டப்படுகிறது. சுதந்திரம் இவை அனைத்தையும் சாத்தியமாக்குகிறது. இந்த மாண்புகளும், கோட்பாடுகளும் ஒட்டு மொத்தமாக நம்மை இந்தியர்களாக்குகின்றன. டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் மதிநுட்பத்தால் வழிகாட்டப்பட்ட அரசியல் சாசன உணர்வு, இந்த அடிப்படை மாண்புகளையும், கோட்பாடுகளையும் உள்வாங்கியிருக்கிறது. இது அனைத்து வகையான பாகுபாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து சமூக நீதிப் பாதையில் வழுவாமல் நம்மை வழிநடத்துகிறது.
சமூக நீதிக்கு அயராது பாடுபட்ட கர்ப்பூரி தாக்கூரின் பிறந்த நூற்றாண்டுக் கொண்டாட்டம் நேற்று நிறைவடைந்ததை இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன். பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன்களை முன்னெடுத்துச் சென்ற மகத்தானவர்களில் ஒருவரான கர்ப்பூரி தனது வாழ்க்கையை அவர்களின் நலனுக்காக அர்ப்பணித்தார். அவரது வாழ்க்கை ஒரு செய்தியாக அமைந்துள்ளது. தனது பங்களிப்புகள் மூலம் பொது வாழ்க்கையை மெருகூட்டியதற்காக கர்ப்பூரிக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.
நமது குடியரசின் நெறிமுறைகள் 1.4 பில்லியனுக்கும் அதிகமானவர்களை ஒருங்கிணைத்து ஒரே குடும்பமாக வாழ வைத்திருக்கின்றன. உலகின் மிகப்பெரிய இந்தக் குடும்பத்தின் சகவாழ்வு புவியியல் அடிப்படையில் அமைந்தது அல்ல; மாறாக மகிழ்ச்சியினால் ஆனது. இந்த வெளிப்பாட்டை நமது குடியரசு தினக் கொண்டாட்டங்களில் காண்கிறோம்.
அயோத்தியாவில் ராமர் பிறந்த இடத்தில் புதிதாகக் கட்டப்பட்ட புகழ் வாய்ந்த கோயிலில் அவரது சிலையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிரதிஷ்டை விழாவை இந்த வார தொடக்கத்தில் நாம் பார்த்தோம். பரந்த நோக்கத்தில் இந்த நிகழ்வைக் காணும்போது எதிர்கால வரலாற்று ஆய்வாளர்கள், இந்தியா அதன் நாகரீக பாரம்பரியத்தை மீண்டும் கண்டறிவதன் தொடர்ச்சியில் மிக முக்கியமானதாகக் கருதுவார்கள். இந்தக் கோயிலின் கட்டுமானம் என்பது உரிய நீதித்துறை நடவடிக்கைகளுக்குப் பின், நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்ற முடிவுக்குப் பின் தொடங்கியது. இப்போது பிரம்மாண்டமான கட்டுமானமாக நிற்கும் இது, மக்களின் நம்பிக்கையை உரிய முறையில் வெளிப்படுத்துவதாக மட்டுமின்றி நீதித்துறை நடவடிக்கைகளில் மக்கள் கொண்டுள்ள மிகப் பெரும் நம்பிக்கையின் சான்றாகவும் இருக்கிறது.
நாம் ஒன்றிணைந்து திரும்பிப் பார்க்கும் போதும், முன்னோக்கிப் பார்க்கும் போதும் நமது நாட்டின் விழாக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. கடந்த ஆண்டு குடியரசு தினத்திலிருந்து நாம் பார்த்தோமானால் இதனை மிகவும் சிறப்பாக உணரலாம். இந்தியத் தலைமைத்துவத்தின் கீழ் தலைநகரில் ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது முன்னெப்போதும் காணப்படாத சாதனையாகும். மிக முக்கியமாக விளங்குவது என்னவென்றால், ஜி20 நிகழ்வுகளில் மக்கள் ஈடுபாடு கொண்டதாகும். சிந்தனைகளும், கருத்துக்களும் மேலிருந்து கீழ் நோக்கி பயணிக்காமல் கீழிருந்து மேல் நோக்கி சென்றன. இந்த மகத்தான நிகழ்வு அனைவருக்கும் தந்த படிப்பினை என்னவென்றால், உத்திபூர்வமான மற்றும் ராஜ்ய ரீதியிலான விஷயங்களில் மக்களின் பங்கேற்பு இருந்ததாகும். இறுதிகட்ட பகுப்பாய்வில் இவர்கள் தங்களுக்கான எதிர்காலத்தை வடிவமைத்தனர். ஜி20 உச்சிமாநாடு உலகளாவிய தெற்கின் குரலாக இந்தியா உருவெடுக்க ஊக்கப்படுத்தியது. சர்வதேச விஷயங்களில் இது தேவையான அம்சமாக இருந்தது.
வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றியதைத் தொடர்ந்து, பாலின சமத்துவ சிந்தனையை நோக்கியும் நாம் மேலும் முன்னேற்றம் அடைந்துள்ளோம். மகளிருக்கு அதிகாரமளிக்க மகளிர் இடஒதுக்கீடு சட்டம் ஒரு புரட்சிகர சாதனமாகும் என்று நான் நம்புகிறேன். நமது நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்துவதிலும் இது வெகுவாக பயன்படும். கூட்டு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் கூடுதலாக பெண்கள் ஈடுபடும்போது நமது நிர்வாக முன்னுரிமைகள் வெகு மக்களின் தேவைகளுடன் கூடுதலாக ஒருங்கிணைக்கப்படும்.
இந்த ஆண்டு இந்தியா நிலவுக்கு சென்றுள்ள ஆண்டாகவும் இருக்கிறது. நிலவின் தென்பகுதியில் தரையிறங்கிய முதலாவது நாடாகவும் மாறியிருக்கிறோம். சந்திரயான்-3-க்குப் பின் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், சூரியப் பயணத்தையும் தொடங்கியுள்ளது. அண்மையில் ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. கருந்துளைகள் போன்ற விண்வெளி அதிசயங்களை ஆய்வு செய்வதற்கு எக்ஸ்போசாட் என அழைக்கப்படும் நமது முதலாவது எக்ஸ்ரே போலாரிமீட்டர் செயற்கைக்கோள் செலுத்துதலுடன் புத்தாண்டை நாம் தொடங்கினோம். இந்த ஆண்டு மேலும் பல விண்வெளிப் பயணங்களுக்கு நாம் திட்டமிட்டுள்ளோம்.
இந்தியாவின் விண்வெளிப் பயணம் புதிய மைல்கற்களை எட்டியுள்ளது என்பதைத் தெரிவிக்க நான் மகிழ்ச்சியடைகிறேன். முதன்முறையாக மனிதர்களைக் கொண்ட விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யான் பயணத்திற்கான தயாரிப்புகள் சுமூகமாக நடைபெற்று வருகின்றன. நமது விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் குறித்து நாம் எப்போதும் பெருமிதம் கொண்டிருக்கிறோம். இப்பொழுது முன்பை விட அவர்கள் மிக உயர்ந்த இலக்கை திட்டமிடுகிறார்கள், செயல்படுத்தவும் செய்கிறார்கள்.
இந்தியாவின் விண்வெளித் திட்டம் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் பயனுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பங்களிப்பை விரிவுபடுத்தி ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இஸ்ரோவின் முன்முயற்சிகளுக்கு நாட்டில் நாம் காண்கின்ற பேரார்வம் மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் துறையின் புதிய சாதனைகள் இளம் தலைமுறையின் கற்பனையை ஊக்கப்படுத்துகிறது. மேலும் அதிகமான குழந்தைகள் அறிவியல் ஆர்வத்தைக் கொள்வார்கள் என்றும், அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பார்கள் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். இது அறிவியல், தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள்ள அதிகப்படியான இளைஞர்களை, குறிப்பாக இளம்பெண்களை ஊக்கப்படுத்தும்.
இந்தியா நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. இது பொருளாதாரத்தின் வலுவான நிலைமையிலிருந்து வருகிறது. அதைப் பிரதிபலிக்கவும் செய்கிறது. அண்மை ஆண்டுகளில் மிகப் பெரிய பொருளாதாரங்களிடையே அதிகபட்சமானதாக நமது ஜிடிபி வளர்ச்சி விகிதம் இருக்கிறது. இந்த அசாதாரணமான செயல்பாடு 2024-லும், அதற்குப் பிறகும் தொடரும் என நம்புவதற்கான அனைத்துக் காரணங்களையும் நாம் கொண்டிருக்கிறோம். தொலை நோக்குப் பார்வை கொண்ட திட்டமிடல், பொருளாதாரத்திற்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது என்பதைக் குறிப்பாக நான் கண்டறிகிறேன்.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கும், நல்வாழ்வு இயக்கத்திற்கும் இது உந்துதலை அளிக்கும். பெருந்தொற்றுக் காலத்தில் சமூகத்தில் நலிந்தப் பிரிவினருக்கு இலவச உணவு வழங்கும் திட்டங்களை அரசு அதிகப்படுத்தியது. இந்த நடவடிக்கை பின்னரும் தொடர்ந்ததையடுத்து நெருக்கடிகளிலிருந்து எளிய மக்கள் வெளிவர உதவிக்கரம் நீட்டியது. ஐந்தாண்டு காலத்திற்கு 81 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. வரலாற்றில் இந்த வகையில் இது மிகப் பெரிய நல்வாழ்வு முன்முயற்சியாகும்.
அனைத்துக் குடிமக்களும் வாழ்க்கையை எளிதாக்க எண்ணற்ற இயக்க ரீதியிலான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. வீடுகளில் போதிய அளவு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதிலிருந்து ஒருவர் சொந்த வீடு பெறுவதை உறுதி செய்யும் வரையிலான திட்டங்கள் குறைந்தபட்ச அடிப்படை தேவைகளே தவிர சலுகைகள் அல்ல. இவை அரசியல் அல்லது பொருளாதார கருத்தியலுக்கு அப்பாற்பட்டதாகும். இவற்றை மனிதாபிமான கண்ணோட்டத்திலிருந்து காண வேண்டும். நலத்திட்டங்களை அரசு விரிவுபடுத்துவது மட்டுமின்றி நலவாழ்வு என்பதற்கான சிந்தனையையும் அரசு மறுவரையறை செய்கிறது.
வீடில்லாமல் இருப்பது அபூர்வம் என்றுள்ள சில நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியிருப்பது நம் அனைவருக்கும் பெருமிதம் தருவதாகும். அதே போல் தேசியக் கல்விக் கொள்கை, டிஜிட்டல் பாகுபாடுகளை இணைப்பதற்கு போதிய முக்கியத்துவம் அளிக்கிறது. ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் பயனடைவதற்காக சீரான கல்விக் கட்டமைப்பை உருவாக்குகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் காப்பீட்டு விரிவாக்கம் அனைத்துப் பயனாளிகளையும் அதன் கீழ் கொண்டு வருவதை நோக்கமாக கொண்டிருப்பதோடு ஏழை எளிய மக்களுக்கு மகத்தான உத்தரவாதத்தையும் வழங்குகிறது.
நமது விளையாட்டு வீரர்கள் இந்தியாவின் பெருமையை சர்வதேச அரங்கில் உயர்த்துகிறார்கள். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 107 பதக்கங்களை வென்று சாதனையை முறியடிக்க வரலாற்றை நாம் உருவாக்கியிருக்கிறோம். ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 111 பதக்கங்களை நாம் வென்றுள்ளோம். நமது பதக்க எண்ணிக்கையில் மகளிர் மிகவும் ஈர்ப்புடைய பங்களிப்பு செய்திருப்பதைக் காண நாம் மகிழ்ச்சியடைகிறோம். நமது விளையாட்டு ஆளுமைகள் பல்வேறு போட்டிகளில் சிறார்கள் ஆர்வமடைய செய்துள்ளனர். அவர்களின் தன்னம்பிக்கை வளர உதவி செய்துள்ளனர். இந்தப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள நமது விளையாட்டு ஆளுமைகள் வரவிருக்கும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் மிகச் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்துவார்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.
அண்மைக்காலங்களில் உலகைச் சுற்றி பல மோதல்கள் ஏற்பட்டுள்ளன. பல பகுதிகள் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளன. இருதரப்பினர் மோதலில் ஈடுபடும்போது ஒவ்வொருவரும் தாம் செய்வது சரியென்றும், மற்றவர் செய்வது தவறு என்றும் நம்புகிறார்கள். நியாயத்தின் வெளிச்சத்தில் இதிலிருந்து வெளியேறும் வழியைக் காண வேண்டியுள்ளது. துரதிருஷ்டவசமாக நியாயத்திற்குப் பதிலாக அச்சமும், தவறான எண்ணங்களும் பொறுமையிழக்கச் செய்கின்றன. இது இடைவிடாத வன்முறைக்கு வழிவகுக்கிறது. இதனால் பெருமளவு மனிதகுல சோகங்கள் தொடர்ச்சியாக ஏற்படுகின்றன.
இந்தத் துயரங்களுக்காக நாம் வேதனைப்படுகிறோம். இத்தகைய தருணங்களில், "எந்த காலத்திலும் பகையின் மூலம் பகைகள் தணிக்கப்படுவதில்லை, பகையின்மையின் மூலமே அவை தணிக்கப்படுகின்றன. இதுவே நித்திய விதி” என்ற பகவான் புத்தரின் வார்த்தைகளை நாம் நினைவுகூர்கிறோம். வர்த்தமான மகாதேவ், சாம்ராட் அசோகர் ஆகியோரிலிருந்து தேசப்பிதா மகாத்மா காந்தி வரை இந்தியா மீண்டும் மீண்டும் அஹிம்சை என்பது சாதிப்பதற்கு சிரமமாக தோன்றும் வெறும் சிந்தனை அல்ல, இது தனித்துவ சாத்தியத்திற்கு உரியது. உண்மையில் இது பலருக்கு எதார்த்தமாக இருந்துள்ளது. மோதல்களில் சிக்கியுள்ள பகுதிகள் அவற்றுக்குத் தீர்வு காணவும், அமைதியை ஏற்படுத்தவும், அமைதியான வழிமுறைகளைக் கண்டறியும் என்று நாம் நம்புகிறோம். உலகளாவிய சுற்றுச்சூழல் நெருக்கடிகளுக்கு வழி காண இந்தியாவின் தொன்மையான ஞானம் உலகத்திற்கு உதவி செய்யும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை வளர்த்தெடுப்பதில் இந்தியா முன்னணியில் இருப்பது குறித்தும், உலகளாவிய பருவநிலை செயல்பாட்டில் தலைமைத்துவம் பெறுவது குறித்தும் நான் மகிழ்ச்சியடைகிறேன். சுற்றுச்சூழல் உணர்வுள்ள வாழ்க்கை முறையை தேர்ந்தெடுப்பதற்கான இயக்கத்தை இந்தியா தொடங்கியுள்ளது. பருவநிலை மாற்றப் பிரச்சினைகளை கையாள தனிநபர் நடத்தை மாற்றத்திற்கு நமது நாடு அளிக்கும் முக்கியத்துவத்தை உலகளாவிய சமூகம் பாராட்டியிருக்கிறது. இயற்கை அன்னையைப் பாதுகாப்பதற்கு ஏற்ப தங்களின் வாழ்க்கை முறையை கொண்டு வர எல்லா இடங்களிலும் உள்ள மக்கள் பங்களிப்பு செய்ய முடியும், பங்களிப்பு செய்ய வேண்டும். இது வரவிருக்கும் தலைமுறைகளுக்கு இந்தப் புவிக்கோளைப் பாதுகாக்க உதவுவது மட்டுமின்றி வாழ்க்கையின் தரத்தை விரிவுபடுத்துவதற்கும் உதவுவதாகும்.
அமிர்த காலம் என்பது முன்னெப்போதும் காணப்படாத தொழில்நுட்பங்களின் காலமாகவும் இருக்கப் போகிறது. செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நமது அன்றாட வாழ்க்கையின் தலைப்புச் செய்திகள் என்பதிலிருந்து வியப்பூட்டும் வேகத்தில் முன்னேறி வருகின்றன. எதிர்காலக் கணிப்பில் கவலை தரும் பல பகுதிகள் உள்ள போதும், வியத்தகு வாய்ப்புகளும் இருக்கின்றன. குறிப்பாக இளைஞர்களுக்கு அவர்கள் புதிய எல்லைகளைக் கண்டறிகிறார்கள். அவர்களின் பாதையில் உள்ள தடைகளை அகற்றுவதற்கும் அவர்களின் முழுமையான திறனை வெளிப்படுத்தவும் நம்மால் இயன்றதை நாம் செய்வது அவசியமாகும். அவர்கள் விரும்புவதெல்லாம் வாய்ப்பில் சமத்துவமாகும். அவர்கள் விரும்புவது என்னவென்றால், சமத்துவம் என்ற பழைய சொல்லாடலான சமத்துவம் என்பதை விட நமது போற்றப்பட்ட சமத்துவ சிந்தனையின் எதார்த்தமாகும்.
நாளைய புதிய இந்தியாவை கட்டமைப்பது அவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இருப்பினும் தேசத்தின் எதிர்கால சிற்பிகளான இந்த இளைஞர்களின் மனம் ஆசிரியர்களால் வடிவமைக்கப்படுகிறது. நமது தேசத்தின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு அமைதியாகவும், வலுவாகவும் பங்களிப்பு செய்கின்ற நமது விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். புனிதமான இந்த விழாக் காலத்தில் நமது ராணுவம், காவல் துறை, துணை ராணுவப்படைகள் ஆகியவற்றின் உறுப்பினர்களுக்கும் இந்தியா வணக்கம் செலுத்துகிறது.
இவர்களின் வீரமும், கண்காணிப்பும் இல்லாவிட்டால் நாம் பெற்றுள்ள உச்சங்களை நம்மால் அடைந்திருக்க இயலாது. உரையை நிறைவு செய்வதற்கு முன் நீதித்துறை மற்றும் குடிமைப்பணியின் உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வெளிநாடுகளில் உள்ள இந்தியாவின் தூதரக அலுவலர்களுக்கும், வெளிநாடுவாழ் இந்திய சமூகத்தினருக்கும் எனது குடியரசு தின வாழ்த்துகள். நாட்டிற்கும், சக குடிமக்களுக்கும் நம்மால் இயன்ற வகையில் சேவை புரிய அனைவரும் நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்வோம். இந்தத் தருணத்தில் உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்” என்று அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago