‘கடும் மூடுபனி நிலவும்’ - குடியரசு தினத்தில் டெல்லிக்கு வானிலை அலர்ட்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் குடியரசு தினத்தன்று நாளை (ஜன.26) அடர்த்தியான மூடுபனி நிலவும் என்பதால் பனிமூட்டத்தால் காலை 8.30 மணி வரை பார்வைத் தெளிவு (Visibility) மிகவும் குறைவாக இருக்கும் என்றும், இதனால் 400 மீட்டர் வரை மட்டுமே மக்கள் பார்க்க முடியும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக குளிர் அதிகரித்து கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக தலைநகர் டெல்லி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், நாட்டில் நாளை குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவை ஒட்டி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாநில சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு மற்றும் பல நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்நிலையில், தேசிய தலைநகரில் 75-வது குடியரசு தின அணிவகுப்பு மற்றும் கொண்டாட்டங்களின்போது அடர்த்தியான மூடுபனி நிலவும் என்றும், அதன் காரணமாக பார்வை தெளிவு (Visibility) மிகவும் குறைவாகவே இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

பனிமூட்டம் காரணமாக டெல்லியில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரை 400 மீட்டர் வரை மட்டுமே மக்கள் பார்க்க முடியும் என்றும், அதன் பிறகு காலை 10:30 மணிக்குள் பார்வை அளவு 1,500 மீட்டராக மேம்படும் என்றும், கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், குறைந்தபட்ச வெப்பநிலை 5 முதல் 7 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் எனத் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE