மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இணைந்து பல மாதங்களுக்கு முன்பே இண்டி கூட்டணியை உருவாக்கின. ஆனால் நாடாாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே அக்கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான கே.சி. தியாகி சமீபத்தில் கூட்டணிக்கென ஒரு திட்டமோ அல்லது செயல்வடிவமோ இல்லையென்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். ‘இண்டி' கூட்டணியானது பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டுமென்றால், கிரிக்கெட் பாணியில் சொல்வதானால் - பேட்டிங்கில் திறமையாக இருந்தால் அதிக ரன்களைக் குவிக்க வேண்டும். அல்லது பந்து வீச்சில் பலமாக இருந்தால் எதிரணியை இத்தனை ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என்பது போல எத்தனை இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கு வேண்டும். அல்லது பாஜகவை எத்தனை இடங்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பது இலக்காக இருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை.
பாஜகவில் தேர்தல் வேலைகள் மும்முரமாகத் தொடங்கிவிட்டன. கட்சி பலவீனமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள 160-க்கும் அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு முன்னதாகவே வேட்பாளர்களை அறிவித்து, அவர்களைத் தேர்தல் பணியைத் தொடங்கவும் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. 2019 தேர்தல் வெற்றியின்போது பாஜகவுடன் இருந்த அதிமுக, ஐக்கிய ஜனதா தளம், அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் இப்போது கூட்டணியிலிருந்து வெளியேறின. எனவே, மகாராஷ்ட்ரா, கர்நாடகா போன்ற ஒரு சில மாநிலங்களைத் தவிர கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமும் இல்லை. ஆளுங்கட்சி என்ற சாதகம். பத்தாண்டு சாதனைகள் என்ற நம்பிக்கை. பல மாநிலங்களில் ஆளுங்கட்சி என்பதும் கூடுதல் பலம். எல்லாவற்றுக்கும் மேலாக ராமர் கோயிலைக் கட்டுவோம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதும் அதன் மூலம் கிடைக்கும் என நம்பப்படும் கூடுதல் ஆதரவும் பாஜகவை ஜெயிக்கும் குதிரை போன்று கட்டமைத்துள்ளது.
தெளிவு இல்லை: ஆனால் ‘இண்டி' கூட்டணியில் இன்னமும் பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை என்பதைவிட எப்படிப் பேச்சுவார்த்தை நடத்துவது என்பதே அவர்களுக்குப் புரிபடவில்லை. இது நாடு முழுவதுக்குமான கூட்டணியா? அல்லது ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியான கூட்டணியா? என்பதிலேயே கட்சிகளுக்குள் தெளிவு இல்லை. கூட்டணி என்பது நாடு முழுமைக்கும், ஆனால் தொகுதிப் பங்கீடு என்பது ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனியாக என்பதுதான் காங்கிரஸ் தவிர்த்த பிற கட்சிகளின் நிலைப்பாடு. இப்படிப்பட்ட ஒரு கூட்டணியால் எப்படி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும்?
கேரளா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி, மகாராஷ்ட்ரா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, கோவா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தராகண்ட், ஒடிசா, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள், தமிழகம், மேற்கு வங்கம், குஜராத் ஆகிய மாநிலங்களில் எல்லாம் கடந்த தேர்தலைப் போலவே இரண்டு அல்லது மும்முனைப் போட்டிகள்தான் இப்போதும் இருக்கும். அதிலும் மகாராஷ்ட்ராவில் கூட்டணிக் கட்சிகளான சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளில் ஏற்பட்டுள்ள பிளவு அங்கே இண்டி கூட்டணியின் பலத்தைத் குறைத்திருக்கின்றது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் காந்தியின் யாத்திரை எந்தவித பலனையும் அளிக்கவில்லை என்பதைவிட கூட்டணிக் கட்சிகளுக்கிடையே காங்கிரஸ் மீதான நம்பிக்கையை இன்னமும் குறையச் செய்திருக்கின்றது. இந்தக் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டபோது நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, அர்விந்த் கேஜ்ரிவால், சரத் பவார், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பிரதமர் எண்ணத்தில் இருந்தனர். வெளியே மறுத்தாலும், இன்னொரு பக்கம் ராகுல் காந்தியை எப்படியாவது பிரதமராக்கிவிட வேண்டும் என்ற கனவில் காங்கிரஸ் உள்ளது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மம்தா பானர்ஜியும் அர்விந்த் கேஜ்ரிவாலும் இணைந்து மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தனர். இதை கார்கே நிராகரித்தார். தேர்தல் வெற்றிக்குப் பின்னரே பிரதமர் யார் என்பதை முடிவு செய்யலாம் என்பதே தற்போதைய நிலைப்பாடு.
இந்த சூழ்நிலையில், மேற்கு வங்கத்தைப் பொருத்தவரை காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிஇல்லை என்றும் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்றும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுபோல பஞ்சாப் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் அம்மாநில முதல்வருமான பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
இண்டி கூட்டணியிலுள்ள காங்கிரஸ் அல்லாதகட்சிகளைப் பொறுத்தவரை தங்களைவிட இருபது அல்லது இருபத்தைந்து தொகுதிகளில் அதிகமாக வென்ற கட்சி என்றுதான் காங்கிரஸைப் பார்க்கின்றன. ஆனால் காங்கிரஸோ மூன்று மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் கட்சிஎன்பதோடு மட்டுமல்லாமல், நாடு முழுமையும் செல்வாக்குள்ள கட்சி என்பதால் தங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று கருதுகிறது.
இரண்டு இலக்கம்: இண்டி கூட்டணியின் பிற கட்சிகளைப் பொறுத்தவரைக்கும் காங்கிரஸ் மீண்டும் செல்வாக்கு பெறுவதை அவைகளால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் தங்கள் மாநிலங்களில் தாங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று நினைக்கின்றன. அடுத்ததாக காங்கிரஸ் தலைமையில் ஒரு ஆட்சி அமைந்தாலும் அது தங்களது செல்வாக்கையும் சக்தியையும் குறைத்து விடும் என்றும் நம்புகின்றன. ஆகையால் கூடுமானவரைக்கும் காங்கிரஸ்கட்சியை இரண்டு இலக்கங்கள் என்ற எண்ணிக்கையிலேயே வைத்தால்தான் நல்லது என்பதும் வெளியே சொல்லப்படாத வியூகமாக இருக்கலாம். இதனால் இண்டி கூட்டணிக் கட்சிகளே ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிடும் காட்சிகளும் அரங்கேறலாம்.
75 என்பதே கடின இலக்கு: காங்கிரஸின் இன்றைய நிலைமையில் 75 என்பதே கடின இலக்காகும். மாநிலக் கட்சிகள் 200 இடங்களில் வென்றால் மட்டுமே ஆட்சியைக் கைப்பற்ற முடியும். அதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகளும் கூட்டணியில் இணைய வேண்டும். மாநிலக் கட்சிகள் தங்கள் மாநிலங்களில், அதாவது பிஹார், மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரா, பஞ்சாப், தமிழ்நாடு ஆகியவற்றில் பாஜகவை ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க விடாமல் முழுமையான வெற்றியைப் பெற வேண்டும். உத்தரபிரதேசத்தில் குறைந்தது 20 இடங்களையாவது கைப்பற்ற வேண்டும்.
இண்டி கூட்டணியைப் பொறுத்தவரைக்கும் காங்கிரஸ் தற்போதைய சூழ்நிலையை உணர்ந்துமாநிலக் கட்சிகள் செல்வாக்கோடு இருக்கும் மாநிலங்களில் தனது ஆதரவை மட்டும் கொடுத்து விட்டு கொடுக்கும் தொகுதிகளைப் பெற்றுக் கொள்ள முன்வர வேண்டும். பாஜகவுடன் காங்கிரஸ் நேருக்கு நேர் மோதும் மாநிலங்களில் பிற மாநிலக் கட்சிகளுக்குப் பெரிய செல்வாக்கு ஏதுமில்லையென்றாலும் ஒற்றுமையைக் காண்பிக்க பிற தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். இதுதான் ஓரளவுக்காவது மக்களின் நம்பிக்கையைப் பெற்றுத் தரும்.
ஆனால் இதிலுள்ள சிக்கல் என்னவென்றால் பாஜகவுடன் நேருக்கு நேர் மோதும் மாநிலங்களில் பெரிய அளவில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை காங்கிரஸுக்கே இல்லை போல் இருக்கிறது. அதனால்தான் பிற மாநிலக் கட்சிகளின் செல்வாக்கில் தனது எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ள முயற்சிக்கின்றது. தேர்தலுக்கு இன்னமும் எப்படித் தயாராவது என்பதையே முடிவு செய்ய முடியாத இண்டி கூட்டணி பாஜகவை வீழ்த்துவது என்பது கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவோம் என்று கனடா அணி நம்புவது போல உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
17 mins ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago