தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இளம் வாக்காளர்களுடன் பிரதமர் இன்று கலந்துரையாடல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான இளம் வாக்காளர்களுடன் பிரதமர்நரேந்திர மோடி இன்று கலந்துரையாட உள்ளார்.

இதுகுறித்து பாஜக இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யாநேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (ஜனவரி 25) பிரதமர் நரேந்திர மோடியுடன் இளம் வாக்காளர்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு பாஜக இளைஞர் அணி ஏற்பாடு செய்துள்ளது.

5,000 இடங்களில்: இதில் நாடு முழுவதிலும்சுமார் 5,000 இடங்களில் இருந்து லட்சக்கணக்கான இளம் வாக்காளர்கள் காணொலி வாயிலாக பங்கேற்கின்றனர்.

ஒரு பிரதமர், இந்த அளவிலான இளம் வாக்காளர்களுடன் உரையாடுவது இதுவே முதல்முறை என்பதால் இது வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும். இது,அவர்கள் தேர்தலில் பங்கேற்பதை ஊக்குவிக்கும். நாட்டின் ஜனநாயக வேர்களை வலுப்படுத்தும்.

2014 மற்றும் 2019-ல் நரேந்திரமோடியை பிரதமராக தேர்ந்தெடுப்பதில் இளம் வாக்காளர்கள் முக்கியப் பங்காற்றியுள்ளனர். மூன்றாவது முறையாக மோடியை பிரதமராக தேர்ந்தெடுப்பதில் அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். பாஜக தலைமையிலான என்டிஏ அரசில் இளைஞர்களுக்கு இணையற்ற வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

விரைவான பொருளாதார வளர்ச்சியால் வேலைவாய்ப்பின்மை எப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய வளர்ச்சி, இளைஞர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பெரிய அளவில் பலன் அளித்துள்ளது. இவ்வாறு தேஜ்ஸ்வி சூர்யா கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE