சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளில் குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி மரியாதை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர், பிரதமர், காங்கிரஸ் தலைவர் உள்ளிட்டோர் நேற்று மரியாதை செலுத்தினர்.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். அவரது பிறந்த நாள் (ஜனவரி 23) பராக்கிரம (துணிச்சல்) தினமாக கொண்டாடப்படும் என கடந்த 2021-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. அந்த வகையில் நாடு முழுவதும் நேற்று நேதாஜி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள நேதாஜியின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நேதாஜி பிறந்த நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “நேதாஜி பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் சுதந்திரத்துக்கு அவர் அர்ப்பணிப்புடன் பாடுபட்டார். அவருடைய தைரிய மனப்பான்மை இந்தியர்களை காலனித்துவ ஆட்சிக்கு எதிராக அச்சமின்றி போராட தூண்டியது. அவரை இந்த நாடு எப்போதும் நன்றியுடன் நினைவுகூரும்” என கூறியுள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் எக்ஸ் பக்கத்தில், “அச்சமற்ற தலைவரான நேதாஜியை நினைவுகூரும் வகையில், அவரது பிறந்த நாள் பராக்கிரம தினமாக கொண்டாடப்படுகிறது.

அவருடைய வெல்லமுடியாத உணர்வும், இந்திய சுதந்திரம் மீதான அசைக்க முடியாத மன உறுதியும் நம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “பராக்கிரம தினத்தில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள். நேதாஜியின் பிறந்த நாளான இன்று, அவரது துணிச்சலுக்கு மரியாதை செலுத்துவோம். நம் நாட்டின் சுதந்திரத்திற்காக அவர் அளித்த பங்களிப்பு நமக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE