“கம்பத்தில் கட்டிவைத்து அடிக்க போலீஸுக்கு அதிகாரம் இருக்கிறதா?”- குஜராத் வழக்கில் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 2022-ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கேதாவில் முஸ்லிம் நபர்கள் சிலரைக் கட்டிவைத்து போலீஸார் அடித்தது தொடர்பான மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜன.22) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிகபதிகள், காவல் துறையினரின் அதிகாரம் பற்றி சரமாரியாக கேள்வி எழுப்பினர். “குற்றவாளியாகவே இருந்தாலும் ஒருவரை கம்பத்தில் கட்டிவைத்து அடிக்க காவல் துறைக்கு அதிகாரம் இருக்கிறதா?” என நீதிபதிகள் காட்டமாக வினவினர்.

நடந்தது என்ன? - கடந்த 2022-ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கேதாவில் நடந்த கார்பா நிகழ்வு ஒன்றில் இடையூறு ஏற்படுத்தியதாக முஸ்லிம் இளைஞர்கள் சிலரை கம்பத்தில் கட்டிவைத்து 4 போலீஸார் அடித்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் 4 காவலர்களுக்கும் குஜராத் உயர் நீதிமன்றம் 14 நாட்கள் காவல் அளித்து உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக அவர்களுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இதனை எதிர்த்து போலீஸார் 4 பேரும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இன்று இந்த வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய், “யாரையும் கம்பத்தில் கட்டிவைத்து அடிக்கும் அதிகாரத்தை சட்டம் காவல் துறைக்கு வழங்கியிருக்கிறதா?” என்று வினவினார். அப்போது நீதிபதி சந்தீப் மேத்தா “கூடவே வீடியோ எடுக்கும் அதிகாரத்தையும் வழங்கப்பட்டிருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.

டிகே பாசு வழக்கை சுட்டிக்காட்டிய நீதிபதிகள்: மேலும், கடந்த 1996-ஆம் ஆண்டு டிகே பாசு vs கொல்கத்தா அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை நீதிபதிகள் இன்று மேற்கோள் காட்டினர். டிகே பாசு வழக்கில் சுதந்திரமான சமூகத்தில் ஒரு தனிநபர் காவல்துறை, சட்ட அமலாக்க அமைப்புகளின் அதிகார துஷ்பிரேயகத்திலிருந்து காக்கப்பட என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதலை உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது.

“காவல் துறைக்கு ஒரு கிரிமினலைக் கைது செய்ய அதிகாரம் இருக்கிறது. அவரிடம் விசாரணை நடத்தி குற்றப் பின்னணியைப் பெறலாம். ஆனால் அதேவேளையில் அந்த நடவடிக்கையின்போது அடித்துத் துன்புறுத்தி ’தெர்ட் டிகிரி’ எனப்படும் மூன்றாம் நிலை தண்டனைகளை வழங்கக் கூடாது” என்று பாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டிய நீதிபதிகள், “சட்டத்தை அறிந்து கொள்ளாமல் காவலர்கள் செய்த குற்றத்தை வைத்து அறியாமையில் செய்துவிட்டார்கள் என்று வாதிட முடியாது” எனத் தெரிவித்தனர்.

மேலும், “ஒவ்வொரு காவலரும், காவல் அதிகாரியும் டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் என்னவென்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்” என்று நீதிபதிகள்.

அப்போது குறுக்கிட்ட காவலர்கள் தரப்பு வழக்கறிஞர், “ஏற்கெனவே அந்த 4 காவலர்களும் கிரிமினல் வழக்கு விசாரணை, துறை ரீதியான விசாரணை மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை வளையங்களில் இருக்கின்றனர் அதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும்” என்று வாதிட்டார். இதனை ஏற்ற நீதிபதிகள், குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE