அயோத்தி ராமர் கோயிலில் குவியும் பக்தர்களிடம் ‘பிக்-பாக்கெட்’ திருடர்கள் கைவரிசை!

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று காலை முதல் பால ராமரை தரிசிக்க பக்தர்கள் திரண்ட நிலையில், காவலர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பிக்-பாக்கெட் திருடர்கள் பலரும் பக்தர்களிடமிருந்த போன், பணம், நகை மற்றும் விலையுயர்ந்த பொருட்களை திருடியதாக புகார்கள் குவிந்துள்ளன.

அயோத்தி ராமர் கோயிலில் நேற்று (ஜன.22) பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடைபெற்றது. பால ராமர் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரதமர் நரேந்திர மோடி கருவறையில் பூஜை செய்தார். இதையடுத்து, ராமர் கோயிலில் இன்று (ஜன.23) காலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையிலும், பின்னர் மதியம் 2 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ராமர் கோயில் பிராண பிரதிஷ்டையைக் காண அயோத்தியில் குவிந்திருந்த பக்தர்கள் இன்று காலை கோயிலில் குழந்தை ராமரை தரிசிக்கத் திரண்டனர். கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியதால், காவலர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பிக்-பாக்கெட்டுகள் திருடர்கள் பலரும் பக்தர்களிடமிருந்த போன், பணம், நகை மற்றும் விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்ததாக புகார்கள் குவிந்துள்ளன.

பூர்ணிமா என்றப் பெண் கனடாவிலிருந்து இன்று காலை, ராமர் தரிசனத்துக்காக அயோத்தி நகருக்கு வந்திருக்கிறார். அதாவது காலை வேளையில், ராமர் சிலை முன்பு பிரார்த்தனை செய்தபடி இருந்திருக்கிறார். அப்போது தனது கைப்பையில் இருந்த பணம் காணாமல் போனதை அவள் உணர்ந்திருக்கிறாள். உடனே பையை சோதித்துப் பார்த்தப் போது, ஒரு பிளேடால் வெட்டபட்ட மெல்லிய வெட்டுகள் இருந்துள்ளன. அதோடு பையில் இருந்த பணம் மற்றும் பிற பொருட்களைக் காணவில்லை என்பதை உணர்ந்திருக்கிறார். இதைக் கண்டு பூர்ணிமா அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர் கூறும்போது, “பக்தர்களின் பெரும் கூட்டத்தை நிர்வாகத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஜேப்படி திருடர்களிடமிருந்து பக்தர்களைக் காப்பாற்ற வேண்டும்" என்று கூறினார்.

பூர்ணிமா அகமதாபாத்தில் வசிக்கும் அவரது தோழி பிராப்தி உடன் அயோத்திக்கு வந்திருக்கிறார். பிராப்தியின் ஜிப் திறக்கப்பட்டு, ஆதார் அட்டை, ஏடிஎம் கார்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் பிற ஆவணங்கள் திருடப்பட்டன. அவை தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும், “நான் என்னுடைய பையை கவனமாகதான் பிடித்துக் கொண்டிருந்தேன். எப்படி ஜிப்பைத் திறந்து ஆவணங்களை எடுத்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார். மேலும், பக்தர்கள் சரியான வரிசையில் நின்று தரிசனம் செய்ய கோயிலில் முறையான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் அவர்கள் நிர்வாகத்தை வலியுறுத்தினார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE