“நம்மை பகவான் ராமர் நிச்சயமாக மன்னிப்பார்” - அயோத்தி கோயிலை திறந்து வைத்த பிரதமர் மோடி பேச்சு

By செய்திப்பிரிவு

அயோத்தி: “பல நூற்றாண்டு காத்திருப்புக்குப் பின் பகவான் ராமர் அயோத்திக்கு வந்துவிட்டார்” என்று ராமர் கோயிலை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவுக்குப் பிறகு கோயிலில் கூடி இருந்த பக்தர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆகியோர் உரையாற்றினர். பிரதமர் மோடி பேசும்போது, "பல நூற்றாண்டு காத்திருப்புக்குப் பின் பகவான் ராமர் வந்துவிட்டார். பல நூற்றாண்டுகளாக நாம் காட்டிய பொறுமை, செய்த தியாகம் காரணமாக இறுதியாக ராமர் வந்துவிட்டார். தற்போது ராமர் சிறிய குடிசையில் இல்லை. மிக பிரம்மாண்டமான கோயிலில் அவர் இருப்பார்.

இந்த தருணத்தில் பகவான் ராமரிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். இந்தப் பணி சில நூற்றாண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்திருக்க வேண்டும். நமது முயற்சி, தியாகம், தவத்தில் இருந்த குறைபாடு காரணமாக அது நிகழாமல் போய்விட்டது. தற்போது அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துவிட்டன. நிச்சயமாக பகவான் ராமர் நம்மை மன்னிப்பார் என நம்புகிறேன். பகவான் ராமருக்கு ஆலயம் அமைப்பதற்கான சட்டப் போராட்டம் பல பத்தாண்டுகளாக நடைபெற்றது. இந்திய நீதித் துறை நீதி வழங்கியதற்காக நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமர் தனது காலத்தில் 14 ஆண்டுகள் வனவாசம் அனுபவித்தார். ஆனால், இந்த காலத்தில் அயோத்தியும் நாட்டு மக்களும் பலநூறு ஆண்டு கால பிரிவை அனுபவித்துவிட்டனர். இதனால், நமது பல தலைமுறைகள் மிகவும் வருந்தின. இந்த வரலாற்று சிறப்பு மிக்க தருணத்தை உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அனுபவித்திருப்பார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். இந்த தருணம் புனிதமானது; தெய்வீகமானது.

ராமர் கோயில் பிராண பிரதிஷ்டையை முன்னிட்டு நாட்டின் பல்வேறு புனிதத் தலங்களுக்கு நான் சென்று வந்தேன். கடல் முதல் சரயு நதி வரை எல்லா இடங்களிலும் ராம பக்தி பிரவாகம் இருந்ததைப் பார்க்க முடிந்தது. மக்களிடையே பண்டிகை உணர்வை காண முடிந்தது. அயோத்தியில் ராமர் கோயில் அமைப்பதற்கான முயற்சி குறித்து குறித்து சில காலங்களுக்கு முன் சிலர் ஏளனம் செய்தனர். அவர்களால், இந்திய சமூக உணர்வின் தூய்மையை புரிந்து கொள்ள முடியவில்லை. இந்திய சமூகத்தின் அமைதி, பொறுமை, பரஸ்பர நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவற்றின் அடையாளமாக இங்கு ராமர் வீற்றிருக்கிறார்.

இந்த நாள் சாதாரணமான மற்றுமொரு நாள் அல்ல. இது காலச்சக்கரத்தின் புதிய துவக்கம். நாடு முழுவதும் ராமபிரானின் இந்த புனித தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டைய காலத்திலிருந்து ராமபிரானின் நினைவு நம் இதயத்தில் நிரந்தரமாக இருந்து வருகிறது. இந்த ஆலயம் நமக்கு மிக முக்கியமானதாகும். நமக்கு உத்வேகம் அளிப்பதற்காக இந்த ஆலயம் உருவாகி உள்ளது. ராமபிரான் அனைவருக்கும் பொதுவானவர். இந்த ஆலயம் இந்தியாவின் முன்னேற்றத்துக்கான அடையாளம். இந்த புண்ணியமான தருணத்தை என்றென்றும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாட்டின் இளைஞர்கள் பல ஆண்டுகால வரலாற்றிலிருந்து உத்வேகம் பெற வேண்டும்" என தெரிவித்தார்.

முன்னதாக, அயோத்தி ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை நிகழ்வு நடந்தது. அதன் விவரம்: ராமர் கோயில் கருவறையில் பிரதமர் மோடி - அயோத்தி கோயில் திறப்பு விழா முக்கிய அம்சங்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்