“இந்த நாளுக்காகவே இந்தியா பல்லாண்டு காத்திருந்தது” - ராமர் கோயில் திறப்பு விழாவில் யோகி ஆதித்யநாத் பேச்சு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “இந்த நாளுக்காகவே இந்தியா பல ஆண்டுகளாக காத்திருந்தது. இது அற்புதமான, மறக்க முடியாத தருணம்” என்று அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. அயோத்தி ராமர் கோயிலில் நடைபெற்ற பிராண பிரதிஷ்டை நிகழ்வுக்குப் பின்னர் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசும்போது, “இந்த நாளுக்காகவே இந்தியா பல ஆண்டுகளாக காத்திருந்தது. 500 ஆண்டுகளுக்குப் பிறகு ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. பிரதமர் மோடி 500 ஆண்டு கால வேட்கையை நிறைவேற்றியுள்ளார். எனது இதயத்தில் இருந்து வெளிப்படும் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை.

எல்லோரும் உணர்ச்சிவசப்பட்டும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள். இந்த வரலாற்று தருணத்தில், நாட்டின் ஒவ்வொரு நகரமும் கிராமமும் அயோத்தியாக மாறியுள்ளது. மேலும் ஒவ்வொரு பாதையும் ராம ஜென்மபூமியை நோக்கிச் செல்வதாகத் தெரிகிறது.

முழு உலகமும், குறிப்பாக அயோத்தி இந்த வரலாற்று தருணத்தில் மகிழ்ச்சியடைந்துள்ளது. ராமர் கோயில் கட்டுமானத்தின் ஒரு பகுதியாக மாறியவர்கள், இந்த தருணத்தைக் காண்பது உண்மையில் பாக்கியம்” என்று பேசினார்.

மேலும், “அயோத்தி மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடும் தற்போது ராம மயமாகி இருக்கிறது. ராமர் அவதரித்த திரேதா யுகத்திற்குள் நாம் வந்துவிட்டது போன்ற உணர்வை இது ஏற்படுத்துகிறது. நாம் எடுத்த உறுதியின் விளைவாக அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.

இன்று அயோத்தியின் தெருக்களில் துப்பாக்கிச் சூடு சத்தம் எதிரொலிக்கவில்லை. ஊரடங்கு உத்தரவு அமலில் இல்லை. மாறாக, தீப உற்சவமும் ராம உற்சவமும் இங்கு இருக்கிறது. அயோத்தி தெருக்களில் ராம சங்கீர்த்தனம் எதிரொலிக்கிறது. குழந்தை ராமரின் கோயில் நிர்மாணம் என்பது ராம ராஜ்ஜியத்திற்கான அறிவிப்பு” என்று அவர் பேசினார்.

அத்துடன் அவர் தனது எக்ஸ் தளத்தில், “ராமர் கோயில் திறப்பு விழா என்பது அற்புதமான, மறக்க முடியாத மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட தருணம்” எனப் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடிக்கு அயோத்தி ராமர் கோயில் வடிவிலான வெள்ளி சிலையை யோகி ஆதித்யநாத் நினைவுப் பரிசாக வழங்கினார்.

பல நூற்றாண்டு காத்திருப்புக்குப் பின் பகவான் ராமர் அயோத்திக்கு வந்துவிட்டார்” என்று ராமர் கோயிலை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அதன் விவரம்: “நம்மை பகவான் ராமர் நிச்சயமாக மன்னிப்பார்” - அயோத்தி கோயிலை திறந்து வைத்த பிரதமர் மோடி பேச்சு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE