அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டைக்கான சிறப்பு பூஜை - தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநில தம்பதிகள் பங்கேற்பு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்படுகிறது. பிரதமர் மோடி கோயிலை திறந்து வைக்கிறார். இதற்காக கடந்த 16-ம்தேதி முதல் சிறப்பு பூஜைகள் தொடங்கின.

இந்த சடங்கில் நாட்டின் அனைத்து திசைகளில் அமைந்த மாநிலங்களின் தம்பதிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். மொத்தம் 14 தம்பதிகள் இடம்பெற்றதில் தமிழ்நாட்டின் ஆடலரசன் தம்பதிக்கும் வாய்ப்பளிக்கப் பட்டு உள்ளது.

இந்தியாவின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு மற்றும்வடமேற்கு திசைகளில் இருந்து 14 மாநிலங்களை சேர்ந்த தம்பதிகள் சிறப்பு பூஜைகளில் இடம் பெற்றுள்ளனர். இப்பட்டியலில், ராஜஸ்தானின் உதய்ப்பூரில் இருந்து ராம்சந்திர கராடி, ஜெய்ப்பூரில் இருந்து குருசரண் சிங் கில் தம்பதிகள் இடம் பெற்றுள்ளனர்.

அசாமில் இருந்து ராம் குய் ஜாமி, மகாராஷ்டிராவில் இருந்து விதாய் கனாலே, முல்தானில் இருந்து ராமேஷ் ஜெயின், ஆந்திராவின் லத்தூரில் இருந்து மகாதேவ் ராவ், கர்நாடகாவில் இருந்து லிங்கராஜ் பசவராஜ் உள்ளிட்ட தம்பதிகளும் உள்ளனர்.

உ.பி. தலைநகர் லக்னோவில் இருந்து திலிப் வால்மீகி, ஹர்தோயில் இருந்து கிருஷ்ண மோகன், காசியில் இருந்து கைலாஷ் யாதவ் மற்றும் கவிந்திரா பிரதாப் சிங், ஹரியாணாவின் பல்வல்லில் இருந்து அருண் சவுத்ரி ஆகிய தம்பதிகளும் உள்ளனர்.

இதுகுறித்து ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின் செய்தித் தொடர்பாளர் ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் 14 நிர்வாகிகளில் ஒருவர் அனில் மிஸ்ரா கூறும்போது, ‘‘நாட்டின் அனைத்து புனிதத் தலங்களில் இருந்து புனித நீர், பூக்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவைராமர் சிலை அமையும் கருவறையில் பூஜை செய்து புனிதப்படுத்தப்படும். கர்நாடக சிற்பி அருண்ராஜ் உருவாக்கி உள்ள 51 அடி உயர ராமர் சிலை அமைக்கும் பணி இன்று திங்கட்கிழமை மதியம் பூர்த்தி அடையும். இதன் இறுதி நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கு கொள்கிறார்’’ என்றார்.

வேதங்களில் குறிப்பிட்டுள்ளபடி அனைத்து ஆகம விதிகளைப் பின்பற்றி ராமர் சிலை நிறுவப்படுகிறது. கடந்த 2020-ல்ராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழாவிலும் இதுபோல் பல மாநில தம்பதிகள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

இந்த 14 தம்பதிகளும் ஒரேநேரத்தில் பூஜையில் பங்கேற்கவில்லை. அன்றாடம் 2 அல்லது 3 தம்பதிகள் என கலந்து கொண்டனர். இவர்கள் அனைவருமே ராமர் கோயில் கரசேவையில் ஏதாவது ஒரு வகையில் கலந்து கொண்டவர்கள். கரசேவையில் உயிரிழந்த சிலரது குடும்பங்களின் தம்பதிகளும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

ராமர் கோயில் கட்டுமானத்துக்கு இதுவரை ரூ.1,100 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோயில் கட்டுவதற்கு மொத்தம் ரூ.1,400 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டுவதற்காக, ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளை சார்பில் தொடக்கத்தில் ரூ.900 கோடி வசூலாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதை விடப் பல மடங்கு அதிகமாக ரூ.5,000 கோடி நன்கொடை வசூலாகி உள்ளது.

நன்கொடை வசூல்: நன்கொடை வசூல் தொடங்கியது முதல், தற்போது வரை அன்றாடம் ரூ.3 லட்சம் முதல் 4 லட்சம் வரை வசூலாகிறது. இன்னும் வெளிநாடுகளில் இருந்து கோயில் கட்ட நன்கொடை பெற தொடங்கவில்லை. தவிர உலகம் முழுவதும் இருந்து சுமார் 5,000 ஆடைகள் ராமருக்காக அனுப்பப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE