அயோத்தி ராமர் கோயில் | விண்வெளி பார்வை: இஸ்ரோ பகிர்ந்த புகைப்படம்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: அயோத்தி நகரில் நாளை ராமர் கோயில் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் அயோத்தி ராமர் கோயிலை விண்வெளியில் இந்தியா சார்பில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்திய செயற்கைக்கோள் எடுத்த படங்கள் பகிரப்பட்டுள்ளன. இதுவே ராமர் கோயிலின் முதல் விண்வெளி பார்வை எனச் சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தை இஸ்ரோவின் நேஷனல் ரிமோட் சென்ஸிங் சென்டர் முகமை பகிர்ந்துள்ளதாக தகவல். கடந்த 2023 டிசம்பர் 16-ம் தேதி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் பகிர்ந்துள்ள இந்தப் படத்தில் சரயு நதி, அயோத்தி ராமர் கோயில், ரயில் நிலையம், தசரத் மஹால் போன்றவை ஹைலைட் செய்யப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

அயோத்தியில் ‘கிழக்கு - மேற்கு’ திசையாக அமைந்துள்ள ராமர் கோயில் வளாகம் 380 அடி நீளம், 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டதாக உள்ளது. கோயிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டுள்ளது. மொத்தம் மூன்று தளங்கள். 392 தூண்கள் மற்றும் 44 வாயில்கள் உள்ளன.

நாளை நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதில் பங்கேற்கும் வகையில் தமிழக பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி புறப்பட்டுள்ளார் பிரதமர் மோடி. இந்நிகழ்வில் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் மாநில அமைச்சர்கள், பல்வேறு துறையைச் சார்ந்த பிரபலங்கள், சாதுக்கள் மற்றும் மக்களும் கலந்து கொள்ள உள்ளனர். அயோத்தி நகரம் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தின் கீழு கொண்டுவரப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE