அயோத்தியில் நீர், நிலம், வான் பகுதியில் பாதுகாப்பு தீவிரம்: உ.பி அரசுக்கு மத்தியப் படைகள் உதவி

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: நாளை (ஜன. 22) திறக்கப்படும் ராமர் கோயிலின் விழாவுக்காக அயோத்தியின் நிலம், நீர் மற்றும் வான் பகுதியில் பாதுகாப்பு தீவிரமாகி உள்ளது. இதற்கான பொறுப்பிலுள்ள உ.பி அரசுக்கு, மத்திய அரசின் பாதுகாப்புப் படைகள், தேசிய உளவு அமைப்புகளான ’‘ரா’ மற்றும் ‘ஐபி’ உள்ளிட்ட பாதுகாப்புப் படை பிரிவினர் உதவிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த ஏற்பாடுகள் டெல்லியில் வெளிநாடுகளின் அதிபர்களுடன் நடைபெற்ற சர்வதேச ஜி20 மாநாடு போன்ற நிகழ்ச்சிகளை மிஞ்சும் அளவில் அமைந்துள்ளன. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நாட்டின் பல முக்கியத் தலைவர்களும், ஆன்மிகவாதிகளும் கலந்து கொள்கின்றனர். இதற்காக, உ.பி அரசுடன் மத்திய அரசும் இணைந்து ஆலோசித்து பலவகையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதில், அயோத்தியின் நிலம், நீர் மற்றும் வானம் ஆகியவைகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் அயோத்தி பகுதியின் ஐஜி பிரவீன் குமார் கூறும்போது, “உ.பி அரசு சார்பில் மாநில காவல்துறையினர், சிறப்புப் படைகளான பிஏசி, எஸ்டிஎப், ஏடிஎஸ், யுபிஎஸ்எஸ்எப் ஆகியோர் ஏராளமான எண்ணிக்கையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு முக்கிய அழைப்பாளர்களுக்கும் பாதுகாப்பு உறுதிசெய்ய க்யூஆர் கோட் அளிக்கப்பட்டுள்ளது. உ.பி.,யின் 75 மாவட்டங்களிலிருந்தும் காவல்துறை அதிகாரிகள் பலரும் அயோத்தியின் சிறப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதில் 100 டிஎஸ்பிக்கள், 325 ஆய்வாளர்கள், 800 உதவி ஆய்வாளர்கள் இடம் பெற்றுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

முக்கிய விருந்தினர்களின் பாதுகாப்புக்காக 3 டிஐஜி, 17 எஸ்பி, 40 ஏஎஸ்பி, 82 டிஎஸ்பி, 90 ஆய்வாளர், 1,000 காவலர்கள் மற்றும் பிஏசியின் 4 படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவருக்கும் உதவும் கைடுகளாக அயோத்தியைப் பற்றி முழுவதுமாக அறிந்த 250 காவலர்களும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

உ.பி அரசின் இந்தப் பாதுகாப்புப் பணியில் மத்திய அரசின் பாதுகாப்புப் படைகள் மற்றும் உளவு அமைப்புகளும் உதவ உள்ளன. சிஆர்பிஎப் படைகளும், உளவுப் பணிக்காக சர்வதேச இந்திய உளவு அமைப்பான ரா (ரிசர்ச் அண்ட் அனலைஸ் விங்) மற்றும் மத்திய உளவு அமைப்பான ஐபி (இன்டலிஜென்ஸ் பீரோ) ஆகியவை அமர்த்தப்பட்டுள்ளன.

இவர்கள் அனைவரும் நிலப்பகுதியின் பாதுகாப்பில் இருப்பர். அயோத்தியின் சரயு நதி வழிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நீர் பாதுகாப்புக்காக என்டிஆர்எப் (தேசிய பேரிடர் மீட்பு படை) சரயுவின் கரைகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அயோத்தியின் 10,715 பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் ஐடிஎம்எஸ் கருவி மூலமாகப் பொருத்தப்பட்டுள்ளன. அயோத்தியைச் சுற்றிலும் ஐந்து கி.மீ தொலைவில் டிரோன்கள் அனுமதியின்றி பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பை மீறிப் பறப்பதைக் கண்காணிக்க டிரோன் எதிர்ப்பு கருவிகள் நீர், நிலம், வானம் ஆகிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தின் பாதுகாப்பிலும் ஏஐ (ஆர்டிபியுஷியல் இண்டலிஜன்ஸ்) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE