பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் ஆண் குழந்தைக்கு தந்தை ஆன போலீஸ் காவலர் @ மகாராஷ்டிரா

By செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ் காவலர் லலித் குமார் சால்வே சமீபத்தில் ஆண் குழந்தைக்கு தந்தையாகியிருக்கிறார். இதில் என்ன ஆச்சரியம் என்று கேட்பவர்களுக்கு, லலித் குமார் சால்வே பெண்ணாக பிறந்து பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட லலித் குமார் சால்வேக்கு ஜனவரி 15-ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. தந்தையாகியிருப்பதில் பூரிப்படையும் ரஜேகான் கிராமத்தில் வசித்து வரும் லலித் குமார், மூன்றாம் பாலினச் சமூகத்தின் மறுமலர்ச்சி மற்றும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துகிறார்.

லலிதா சால்வே என்ற இயற்பெயர் கொண்ட லலித் குமார் சால்வே கடந்த 1988-ம் ஆண்டு பிறந்தார். 2010-ம் ஆண்டில் மகாராஷ்டிரா மாநில காவல் துறையில் சேர்ந்த லலிதா 2013-ம் ஆண்டு தன்னுடைய உடலில் மாற்றங்கள் ஏற்படுவதை உணர்ந்தார். மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் அவரது உடலில் ஆண்களுக்கு இருக்கும் ‘ஒய்’ குரோமோசோம்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பெண்களுக்கு உடலில் இரண்டு ‘எக்ஸ்’ குரோமோசோம்கள் இருக்கும். ஆண்களுக்கு ‘எக்ஸ்’, ‘ஒய்’ குரோமோசோம்கள் இருக்கும். இதன் காரணமாக லிலதாவுக்கு மருத்துவர்கள் பாலினமாற்று அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர்.

இந்த நிலையில், மாநில அரசின் அனுமதியினைத் தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு லலிதா பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு லலித் குமார் சால்வேயாக மாறினார். லலித் குமாருக்கு 2018 முதல் 2020 வரை மூன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டன. பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம் புதிய பயணத்தைத் தொடங்கிய லலித் குமார் சால்வே, கடந்த 2020-ம் ஆண்டு சத்ரபதி சம்பாஜிநகரைச் ச சேர்ந்த சீமா என்பவரைத் திருமணம் செய்து கொண்டு வாழ்வின் புதிய அத்தியாயத்தை தொடங்கினார்.

இந்தப் புதிய இணைவு சால்வேயின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மைல்கலாக மாறியது. பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களின் திருமண வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறது. தந்தையானது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய லலித் குமார் சால்வே, "பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய எனது வாழ்க்கை பல்வேறு போராட்டங்கள் நிறைந்தது. இந்தக் காலக்கட்டங்களில் எனக்கு ஆதரவளிக்கும் மக்களை நான் பெற்றிருப்பதை ஆசீர்வதமாக உணர்கிறேன். எனது மனைவி சீமா குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார். நான் இப்போது தந்தையாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனது குடும்பம் ஆச்சரியத்தில் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE