ராமர் கோயில் கும்பாபிஷேகம் - மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள விடுமுறை விவரம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் நடைபெற உள்ளதை முன்னிட்டு மத்திய மாநில அரசுகள் விடுமுறை அறிவித்துள்ளன. அது குறித்த முழு விவரத்தை தற்போது பார்ப்போம்.

மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், பிராந்திய கிராமப்புற வங்கிகள் ஆகியவற்றுக்கு ஜனவரி 22ம் தேதி அரை நாள் விடுமுறை. மத்திய கல்வி நிறுவனங்களான ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் அதன் பள்ளிகள், டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவை அன்றைய தினம் மதியம் 2.30 மணி வரை மூடப்பட்டிருக்கும். அதேபோல், தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை ஆகியவை அன்றைய தினத்தன்று வர்த்தகத்தில் ஈடுபடாது.

அயோத்தி கோயில் அமைந்துள்ள உத்தரப்பிரதேசத்திலும், மகாராஷ்டிராவிலும் ஜனவரி 22ம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் அரசு அலுவலகங்களுக்கு முழு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில், அன்றைய தினம் அரசு அலுவலகங்களுக்கும், பள்ளி கல்லூரிகளுக்கும் முழுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சண்டிகர் யூனியன் பிரதேசமும் முழுநாள் விடுமுறை அறிவித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு முழு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம், ஹரியானா, ஒடிஷா, ராஜஸ்தான், திரிபுரா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE