“பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது” - காசா போர் குறித்து அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

By செய்திப்பிரிவு

டெல் அவிவ்: காசா போரால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில், நிலையான தீர்வு தேவைப்படுகிறது. பயங்கரவாதத்தையும், பணயக்கைதிகளை பிடித்து வைத்திருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய காசா - இஸ்ரேல் மோதல், தற்போது வரை தொடர்ந்து வருகிறது. “காசா தாக்குதல் வெறும் ஆரம்பம்தான் இனி நடப்பதை என்னால் கூட கணித்துச் சொல்ல முடியாது" என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆரம்பத்திலேயே எச்சரித்த நிலையில், இன்னும் இந்த போருக்கு சுமூக முடிவு காணப்படவில்லை. இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நடைபெற்ற 19வது அணிசேரா நாடுகளின் (NAM) உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், “காசாவில் தற்போது நிலவிவரும், மோதல்களைப் பற்றி நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த போரால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில், நிலையான தீர்வு தேவைப்படுகிறது. பயங்கரவாதத்தையும், பணயக்கைதிகளை பிடித்து வைத்திருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதே நேரத்தில், அனைத்து நாடுகளும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மதிக்க வேண்டும். இந்த மோதல் பிராந்தியத்திற்குள் அல்லது அதற்கு வெளியே பரவாமல் இருப்பது அவசியம். பாலஸ்தீன மக்கள் பாதுகாப்பான எல்லைக்குள் வாழவேண்டும். அதே வேளையில், இரு நாடுகளிலும் அமைதி நிலவுவதற்கான தீர்வை நாம் தேட வேண்டும். நமது கூட்டு முயற்சிகளின் மூலம், இதை நனவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE