இஸ்ரேல் நாட்டில் வேலை | ஹரியாணா அரசு ஆட்சேர்ப்பு முகாம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காஸாவில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை தொடங்கியதிலிருந்து இஸ்ரேலில் கட்டுமானம் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவிலிருந்து தொழிலாளர்களை தேர்வு செய்யும் பணியில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, ஹரியாணா அரசு, இஸ்ரேலில் உள்ள 10,000 பணியிடங்களை நிரப்புவதற்கான விளம்பரங்களை கடந்த டிசம்பரில் வெளியிட்டது. தச்சர்கள், பீங்கான் டைல்ஸ் ஒட்டுநர்கள், மேஸ்திரிகள், உருக்காலை தொழிலாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு மாத சம்பளம் ரூ.1.37 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.

இதற்காக 6 நாட்கள் நடைபெறவுள்ள ஆட்சேர்ப்பு முகாமில் ஒடிசா, பஞ்சாப், உத்தரபிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 3-வது நாளான வியாழக்கிழமை ராஜஸ்தான் தவுஸாவைச் சேர்ந்த ஜெகதீஷ் பிரசாத் (42) என்பவரும் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். குடும்பத்தில் என்னை நம்பி 8 பேர் உள்ளனர். வருவாய் குறைவு, செலவு அதிகம். இந்தியாவில் வாய்ப்பு இல்லை என்பதால் வெளிநாடு செல்ல தயாராகிவிட்டேன்.

இஸ்ரேலில் பாதுகாப்பற்ற சூழல் இருந்தால் இந்திய அரசு எங்களை எப்படி அங்கு அனுப்ப சம்மதிக்கும். எனவே, நாங்கள் பாதுகாப்பான இடத்தில் பணியமர்த்தப்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

ராஜஸ்தானின் சிகாரைச் சேர்ந்த பட்டதாரியான ராம்பால் கஹ்லோட் (25) கூறுகையில், “கல்லூரி படிப்புக்குப் பிறகு அரசு தேர்வுகளை எழுதினேன். ஆனால் தேர்ச்சி பெறவில்லை. விவசாயம் செய்தேன். வருமானம் போதவில்லை. உருக்காலை பணிக்கு விண்ணப்பித்துள்ளேன். இஸ்ரேலில் போர் பதற்றம் இருப்பது தெரியும். ஆனால், அதற்கு பயந்து வீட்டில் இருந்தால் சாப்பாடு எப்படி கிடைக்கும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE