ராமர் கோயில் நினைவு அஞ்சல் தலை - பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் நினைவு அஞ்சல் தலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர்கோயில் வரும் 22-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், ராமர் கோயில், கணபதி, ஹனுமன், ஜடாயு, கேவத்ராஜ் மற்றும்மா ஷாப்ரி ஆகிய 6 நினைவு அஞ்சல் தலைகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டார்.

இதுபோல அமெரிக்கா, சிங்கப்பூர், கனடா, நியூசிலாந்து உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிடப்பட்டுள்ள கடவுள் ராமர் அஞ்சல் தலைகள் அடங்கிய புத்தகத்தையும் அவர் வெளியிட்டார். 48 பக்கங்களைக் கொண்ட இந்த புத்தகம், உலக அளவில் ராமர் பிரபலமாக உள்ளார் என்பதை எடுத்துரைக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது:

அஞ்சல் தலைகள் வெறும் காகிதத் துண்டோ அல்லது கலைப்படைப்போ அல்ல, அவை காவியங்கள் மற்றும் சிறந்த கருத்துகளின் ஒரு சிறிய வடிவம் ஆகும். ராமர், சீதை மற்றும் ராமாயணம் மீதான ஈர்ப்பு என்பது, சமூகம், சாதி, மதம் மற்றும் பிராந்தியம் என அனைத்து எல்லைகளையும் தாண்டி அனைவரையும் இணைக்கிறது.

ராமாயணம் அன்பின் வெற்றி என்ற செய்தியை சொல்வதுடன் மனிதகுலத்தை இணைக்கிறது. மிகவும் கடினமான தருணத்திலும் தியாகம், ஒற்றுமை மற்றும் துணிவு ஆகியவற்றையும் கற்பிக்கிறது. அதனால்தான் இந்த காவியம் உலகளாவிய ஈர்ப்பு மையமாக விளங்குவதுடன், எல்லா இடங்களிலும் மரியாதையுடன் பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE