குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் வழிபாடு: கேரளாவில் ரூ.4,000 கோடி திட்டங்களை தொடங்கினார் பிரதமர்

By செய்திப்பிரிவு

கொச்சி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் 22-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு, கடந்த 12-ம் தேதி முதல் 11 நாள் விரதம் இருக்கும் பிரதமர் மோடி, நாடு முழுவதும் ராமருடன் தொடர்புடைய கோயில்களில் வழிபாடு நடத்தி வருகிறார்.

அந்த வகையில், நேற்று மாலை கேரள மாநிலம் கொச்சி விமான நிலையம் சென்ற பிரதமரை முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிப் முகமது கான், மத்திய அமைச்சர் வி.முரளிதரன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்குள்ள விருந்தினர் மாளிகையில் பிரதமர் தங்கினார்.

நேற்று காலையில் குருவாயூர் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள கிருஷ்ணர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் குருவாயூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகியும், நடிகருமான சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் பங்கேற்றார். அங்கிருந்து சாலை மார்க்கமாக திருப்பறையாறு சென்ற அவருக்கு சாலையின் இருபுறமும் கூடியிருந்த பாஜகவினர் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் அங்கு கருவன்னூர் ஆற்றங்கரையில் உள்ள ராமசாமி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.

அங்கிருந்து கொச்சிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் ரூ.4,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். இதில் கொச்சி ஷிப்யார்டு நிறுவனத்தின் புதிய கப்பல் கட்டுமான தளம் (என்டிடி) மற்றும் கப்பல் பழுது பார்ப்பு தளம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் எல்பிஜி இறக்குமதி முனையம் உள்ளிட்டவை முக்கிய திட்டங்கள் ஆகும்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, உள்நாட்டு நீர்வழித் தடங்கள் உள்ளிட்ட துறைகளில் சுலபமாக தொழில் தொடங்க ஏதுவாக பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் துறைமுக துறையில் ஏராளமான முதலீடு குவிந்துள்ளது. இதன் மூலம் கூடுதல் வேலைவாய்ப்பும் உருவாகி உள்ளது.

சாகர்மாலா பரியோஜனா திட்டங்கள் மூலம் துறைமுகங்களின் திறனை மேம்படுத்தவும், துறைமுக உள்கட்டமைப்பு வசதிகளை பலப் படுத்தவும், துறைமுகங்கள் இடையே இணைப்பை அதிகரிக்கவும் மத்திய அரசு உரிய முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் கொச்சியில் இன்று தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள், தென்னிந்தியாவின் வளர்ச்சி வேகத்தை அதிகப்படுத்தும். குறிப்பாக இங்கு கப்பல் பழுதுபார்க்கும் தளம் நிறுவப்பட்டிருப்பதால், இனி நாட்டின் முக்கிய கப்பல் பழுதுபார்ப்பு முனையமாக கொச்சி உருவெடுக்கும். இதன் மூலம் ஆசியாவின் மிகப்பெரிய கப்பல் பழுதுபார்ப்பு மையமாகவும் இந்தியா மாறும்.

அமிர்த காலத்தில் வளர்ச்சியை நோக்கிய இந்தியாவின் பயணத்தில், ஒவ்வொரு மாநிலமும் முக்கிய பங்கு வகிக்கிறது. அனைவரும் இணைந்து செயல்பட்டால் அதற்கு சிறந்த பலன் கிடைக்கும். இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜக பூத் நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, இடதுசாரி முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய இரு கூட்டணியும் ஊழலில் திளைக்கிறது என்றும் இதை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE