அண்ணன் Vs தங்கை @ ஆந்திர அரசியல் யுத்தம் - ஷர்மிளாவுக்கு காத்திருக்கும் சவால்கள்!

By நிவேதா தனிமொழி

ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் அங்கு, ஒய்.எஸ் vs ஒய்.எஸ் என தேர்தல் களம் புதுமையைச் சந்தித்துள்ளது. இதில் வென்று சக்தி மிக்க பெண் தலைவர்களின் பட்டியலில் இடம்பிடிப்பாரா ஷர்மிளா? அவருக்கு முன் இருக்கும் சவால்கள் என்னென்ன? - இதோ ஒரு விரைவுப் பார்வை.

கடந்த 2009-ம் ஆண்டு, ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் உயிரிழந்தார். அவர் மறைவுக்குப் பிறகு, அவரின் குடும்பத்துக்கு, குறிப்பாக அவரின் மகனான ஜெகன் மோகன் ரெட்டிக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் கொடுத்து, அவரை முதல்வராக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், ரோசய்யாவை காங்கிரஸ் கட்சி ஆந்திர முதல்வராக்கியது. இதனால், அதிருப்தியில் ஜெகன் மோகன் ரெட்டி காங்கிரஸில் இருந்து வெளியேறினார்.

ஜெகன் மோகன் நடத்திய ’ஓடர்பு பாத யாத்திரை’ ஆந்திர அரசியலில் அவரின் மைலேஜைக் கூட்டியது. அப்போது அவர் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை விமர்சிக்கவும் செய்தார். பின்பு 2011-ம் ஆண்டு ‘ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்’ என்னும் புதிய கட்சியைத் தொடங்கினார். கட்சித் தொடங்கப்பட்ட ஒரு வருடத்திலேயே சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெகன் மோகனை சிபிஐ கைது செய்தது. எனவே, அவருக்குப் பதிலாக, அவரது தாயார் ஒய்.எஸ்.விஜயம்மா கட்சியைக் கவனித்துக் கொள்ள, அவரது தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா, அரசியலில் குதித்து, ஜெகன் பாதியில் கைவிட நேர்ந்த பாத யாத்திரையை தொடர்ந்ததால், மக்களிடம் வரவேற்பு பெற்றார்.

ஜெகன் மோகன் சிறையிலிருந்து வெளிவந்த பின்பு, 2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அதில் எதிர்க்கட்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின், 2019-ம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார். இந்த நிலையில், அவருக்கும் அவரது குடும்பத்துக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக ஒய்.எஸ்.விஜயம்மா, ஒய்.எஸ்.ஷர்மிளா ஆகியோர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸில் இருந்து பிரிந்தனர். 2021-ம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா என்னும் புதிய கட்சியை ஷர்மிளா தொடங்கினார்.

அதனால், 2023-ம் ஆண்டு நடந்த தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவதாகத் தெரிவித்தார். அதில், காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதன்பின்னர் தான் தொடங்கிய கட்சியை காங்கிரஸுடன் இணைத்துவிட்டு, இரண்டு வாரங்களுக்கு முன்பு மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். பின்னர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரையும் சந்தித்தார்.

ஷர்மிளாவை ஆந்திரா மாநில காங்கிரஸின் தலைவராக நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில், அவர் கட்சியில் இணைந்த இரண்டு வாரங்களில் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக, காங்கிரஸ் தலைவராக இருந்த ருத்ர ராஜு தலைவர் பதவிலிருந்து விலகிய அடுத்த நாளே, அந்தப் பதவி ஷர்மிளாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ருத்ர ராஜு காங்கிரஸ் செயற்குழு சிறப்பு உறுப்பினராக நியமித்துள்ளது காங்கிரஸ் தலைமை.

இது குறித்து ஒய்.எஸ்.ஷர்மிளா கூறுகையில், ‘‘ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக நியமனம் செய்திருப்பதால் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக நான் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.

ஒய்.எஸ்.ஷர்மிளா ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டவுடன், அங்கு, ஒய்.எஸ் vs ஒய்.எஸ் என தேர்தல் களம் மாறியுள்ளது. அதில் ஷர்மிளாவுக்கு எதிரே இருக்கும் சவால்கள் என்ன?

இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் மட்டுமின்றி ஆந்திர மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலும் நடக்கவிருக்கிறது. இதனால், ஷர்மிளாவின் நியமனம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஷர்மிளா தன் சகோதருக்கு எதிராக தேர்தல் களத்தில் நிற்கிறார். ஒரே நேரத்தில் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலுக்கு அவர் உழைக்க வேண்டும். தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே இருப்பதால், அவரின் தேர்தல் வியூகங்கள் மற்றும் திட்டமிடல் என்ன என்பதை அரசியல் தலைவர்களும் அரசியல் விமர்சகர்களும் மட்டுமின்றி மக்களும் உற்றுநோக்கி வருகின்றனர்.

அதேபோல், ஒய்.எஸ்.ஆர். குடும்பத்திலிருந்து ஆந்திர காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்கும் இரண்டாவது நபர் என்னும் பெருமையைப் பெற்றிருக்கிறார் ஷர்மிளா. இதனால் அவர் தந்தையின் பெயரைக் காக்க தன் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்து.

ஒய்.எஸ்.ராஜ சேகர் ரெட்டி தலைவராக இருந்தபோது 2004, 2009 என அடுத்தடுத்த தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், ஆந்திர மாநிலத்தைக் கைப்பற்றியது. கடந்த 2014-ம் ஆண்டு, அந்திரா - தெலங்கானா பிரிவுக்குப் பிறகு, ஆந்திராவில் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. இந்த ஒட்டுமொத்த களங்கத்தையும் ஷர்மிளா துடைத்தெறிவாரா என்பதுதான் காங்கிரஸ் மேலிடத்தின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.

இந்திய அரசியலில் விரல் விட்டு என்னும் அளவில்தான் பெண் தலைவர்கள் உள்ளனர். அதிலும் கட்சியின் தலைமையில் ஜொலித்த பெண் தலைவர்கள் சொர்ப்பம்தான். இந்த நிலையில், இந்திய அரசியல் களத்தில் தன்னை சக்திமிக்க பெண் ஆளுமையாக நிலைநிறுத்திக் கொள்ள, ஷர்மிளாவுக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு இது. இதை மூன்றே மாதங்களில் செய்ய வேண்டும் என்பது பெரும் சவால்தான்.

ஆந்திர மாநிலத்தில் வெறும் மண் குதிரையாக இருக்கும் காங்கிரஸுக்கு, புது வியூகங்கள் மூலம் உயிர் கொடுத்து எழச் செய்வாரா, சக்தி வாய்ந்த தலைவராக மிளிரும் தன் சகோதரனைக் கடந்தோடி வீழ்த்தி, வெற்றி வாகை சூடுவாரா ஷர்மிளா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

43 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்