திறன்மேம்பாடு திட்ட நிதி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

By என்.மகேஷ்குமார்


அமராவதி: திறன்மேம்பாடு திட்ட நிதி முறைகேடு வழக்கில், ஒரு முன்னாள் முதல்வரான என்னை கைது செய்ய 17-ஏ சட்டப்பிரிவின் படி, ஆளுநருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து, அனுமதி பெற்றிருக்க வேண்டும். அப்படி செய்யாமல், திடீரென சிஐடி போலீஸார் எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் கைது செய்தது சட்டப்படி செல்லாது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர்சந்திரபாபு நாயுடு தரப்பில் கடந்தஆண்டு செப்டம்பர் 23ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே சந்திரபாபு நாயுடுவுக்கு இதே வழக்கில் ஆந்திர உயர் நீதிமன்றம் தற்காலிக ஜாமீன் வழங்கியது. இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி சிறையில் இருந்து வெளியே வந்தார்.

அதன் பின்னர், தற்காலிக ஜாமீன்ரத்து செய்யப்பட்டு, நிரந்தர ஜாமீனும் வழங்கப்பட்டது. ஆனால்,திறன் மேம்பாடு நிதி வழக்கில் 17-ஏ வின் படி தன்னை கைது செய்தது செல்லாது எனும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நீதிபதி அனிருத்தா போஸ், நீதிபதி பேலாஎம். திரிவேதி ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆளுநரிடம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமலும், தக்க அனுமதி பெறாமலும் சந்திரபாபு நாயுடுவை கைது செய்துள்ளனர். சிஐடி தக்க அனுமதி பெற்றிருக்க வேண்டும். இல்லையேல் இது சட்ட விரோதமானது என நீதிபதி அனிருத்தா போஸ் தனது தீர்ப்பில் கூறினார்.

ஆனால், மற்றொரு நீதிபதியான பேலா எம். திரிவேதி தனதுதீர்ப்பில், 17-ஏ எனும் திருத்தப்பட்ட சட்டத்தின் படி, சந்திரபாபு நாயுடுவை கைது செய்தது செல்லும். அதாவது, 2018 ஆண்டில் தான் இச்சட்டம் அமலுக்கு வந்தது. அதற்கு முன்பாக இவ்வழக்கு பதிவாகி உள்ளதால், சந்திரபாபு நாயுடுவை ஆளுநரின் அனுமதி பெறாமல் கைது செய்தது செல்லுமென தீர்ப்பு வழங்கினார்.

இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால், இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாற்றுவதாக நீதிபதி அனிருத்தா போஸ் அறிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE