கியான்வாபி மசூதியில் உள்ள ஒசுகானாவை சுத்தம் செய்யலாம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கியான்வாபி மசூதியில் உள்ள ஒசுகானாவை சுத்தம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. மசூதி சுவரில் அமைந்துள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதி கோரி 2021-ல் 5 இந்து பெண்கள் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், கியான்வாபி மசூதியில் கள ஆய்வு நடத்த உத்தரவிட்டது. இதன்படி மசூதியில் ஆய்வுநடத்தப்பட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் மசூதியில் உள்ள ஒசுகானாவில் (தொழுகைக்கு முன்பு கை, கால்களை சுத்தம் செய்யும் இடம்) சிவலிங்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இதற்கு முன்பு கோயில் இருந்த இடத்தில் கியான்வாபி மசூதி கட்டப்பட்டதா என்பதைத் கண்டறிய மசூதியின் வளாகத்தில், இந்திய தொல்லியல் துறையின், அறிவியல்பூர்வ ஆய்வுக்கு வாரணாசி மாவட்டநீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில் மசூதியில் உள்ள ஒசுகானாவை சுத்தம் செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதியளிக்க வேண்டும் என்று கோரி இந்து அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஒசுகானா தண்ணீரில் மீன்கள் இறந்திருந்ததாகவும், அதனால் அதை சுத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்ற நீதிபதிகள், ஒசுகானாவை சுத்தம் செய்தவதற்கு அனுமதி வழங்கினர். நீதிமன்றத்தில் ஆஜராகி யிருந்த கியான்வாபி மசூதிகமிட்டி சார்பிலான வழக்கறிஞரும், ஒசுகானாவை சுத்தம்செய்வதற்கு தகுந்த ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE