அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்போருக்கு ராமராஜ்ய மண் நினைவுப் பரிசு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டவர்களுக்கு, நினை வுப்பரிசாக ராமராஜ்ய மண் பரிசாக அளிக்க அயோத்தியின் ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது.

அயோத்தியில் வரும் 22-ம் தேதி ராமர் கோயில் திறக்கப்படவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க சுமார் 11,000 பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் பல்வேறு வகை இனிப்புகள் பிரசாதங்களாக அளிக்கப்பட உள்ளன. இத்துடன் அயோத்தி ராமராஜ்யத்தின் சிறிதளவு மண் அழகாக பேக்செய்து அளிக்கப்பட உள்ளது.இந்த மண் கோயில் கட்டுவதற்காகத் தோண்டப்பட்ட போதுஎடுக்கப்பட்டது ஆகும். இது,அக்கோயிலை கட்டிவரும் ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளையின் சார்பிலான புதிய நினைவுப்பரிசாக இடம்பெற உள்ளது.

சணல் பையில் இந்த நினைவுப்பரிசு மிகவும் கவனமாகப் பேக் செய்யப்படுகிறது. இதை ராமபக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று தாம் வளர்க்கும் செடி, கொடி, மரங்களில் தூவலாம். தங்கள் பூசை அறைகளிலும் வைத்து அன்றாடம் வணங்கலாம் எனக் கருதப்படுகிறது.

இதே பையில், ராமரின் அழகான ஒரு பெரிய பலவண்ணப் படமும் அளிக்கப்பட உள்ளது. சுமார் 7,500 பேர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கருதப்பட்டு அவர்கள் அமர க்யூஆர் கோட் எண் அளிக்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு வரும் பிரதமர் கோயிலில் சிலை பிரதிஷ்டைக்குப்பின் சிறப்புரையும் நிகழ்த்த உள்ளார். இதற்காக, அவருக்கு பலத்த பாதுகாப்புகளுடன் கோயில்வளாகத்தில் ஒரு மேடை அமைக்கப்பட உள்ளது. ஜனவரி 22 -ம் தேதி இந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் மத்திய அரசின் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சிறப்பு நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளது.

இதற்காக, டிடி சார்பில் ராமர் கோயில் வளாகம் உள்ளிட்ட அயோத்தியின் முக்கிய பகுதிகளில் 40 கேமராக்கள் அமைக்கப்பட உள்ளன. சுமார் 300 பேர் கொண்ட டிடி குழுவினர் இதற்காகஅயோத்திக்கு வர உள்ளனர். இந்தி, ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பெரும்பாலான இந்திய மொழிகளில் வெளியாகும் இந்த ஒளிிபரப்பு தனியார் தொலைக்காட்சிகளுக்கும் அளிக்கப்பட உள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதன் காரணமாக அந்நகரில் பல வளர்ச்சித் திட்டங்கள் அமலாகி வருகின்றன. இதில் புதிய திட்டமாக மும்பையை சேர்ந்த ஒரு பிரபல நிறுவனம் சார்பில் 10,000 சதுர அடிகள் கொண்ட பங்களா குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. சுமார் 15 கோடி மதிப்புள்ள இவற்றில் ஒன்றை பாலிவுட் நடிகரான அமிதாப்பச்சனும் வாங்க உள்ளதாகத் தகவல் பரவி உள்ளது.

இக்குடியிருப்புகளின் அருகில் ஏழு நட்சத்திர அந்தஸ்தில் ஒரு விடுதியும் கட்டப்பட உள்ளது. இதில், இந்தியாவில் முதன்முதலாக சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்பட உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE