ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ராஜினாமா - ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு வாய்ப்பு?

By செய்திப்பிரிவு

விஜயவாடா: ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த, கிடுகு ருத்ர ராஜு தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அந்த பதவியில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா கடந்த ஜன.4ஆம் தேதி தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக் கொண்டார். இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அவரது இந்த செயல்பாடு ஆந்திர அரசியலில் கவனம் பெற்றது. “காங்கிரஸ் நம் நாட்டின் மிகப்பெரிய மதச்சார்பற்ற கட்சியாகும், அது எப்போதும் இந்தியாவின் உண்மையான கலாச்சாரத்தை நிலைநிறுத்தி, நமது தேசத்தின் அடித்தளத்தை கட்டியெழுப்புகிறது” என்றும் ஷர்மிளா கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த, கிடுகு ருத்ர ராஜு தனது பதவியை இன்று (ஜன.15) ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை கடந்த வாரம் அவர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த கடிதத்தில் ராஜினாமாவுக்கான காரணம் எதையும் அவர் குறிப்பிடவில்லை என்றும் தெரிகிறது.

இதனையடுத்து ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை ஷர்மிளா காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டால், ஆந்திர அரசியலில் அது ஒரு முக்கிய திருப்பமாக பார்க்கப்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ஷர்மிளா இடையிலான அரசியல் போட்டி சூடுபிடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE