‘டீப் ஃபேக் வீடியோக்களுக்கு விரைவில் கட்டுப்பாடு’ - சச்சின் போலி வீடியோ விவகாரத்தில் மத்திய அமைச்சர் உறுதி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆன்லைன் கேம் தொடர்பான விளம்பரம் ஒன்றில் சச்சின் டெண்டுல்கரின் குரல் மற்றும் காணொலி அவரது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து டீப் ஃபேக் வீடியோக்களுக்கான கடுமையான விதிமுறைகள் விரைவில் அமலுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உறுதி அளித்துள்ளார்.

சமீபகாலமாக டீப் ஃபேக் தொழில்நுட்பத்தின் உதவியால் பிரபலங்களின் முகம் மற்றும் குரலை பயன்படுத்தி போலி வீடியோக்கள் இணையத்தில் அதிகமாக உலா வருகின்றன. நடிகைகள் ராஷ்மிகா, கத்ரீனா கைஃப் உள்ளிட்டோரின் வீடியோக்கள் சமீபத்தில் சர்ச்சையை கிளப்பின. அந்த வகையில், ஒரு ஆன்லைன் கேம் தொடர்பான விளம்பரத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் குரல் மற்றும் அவரது முகம் அவரது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டிருந்தது.

அந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சச்சின், “இந்த வீடியோக்கள் போலியானவை. தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கும்போது கவலையாக இருக்கிறது. இது போன்ற வீடியோக்கள், விளம்பரங்கள் ஆகியவை குறித்து அதிகளவில் புகாரளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். சமூக ஊடக தளங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் புகார்களுக்கு பதிலளிக்க வேண்டும். தவறான தகவல் மற்றும் டீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதைத் தடுக்க அவர்கள் தரப்பில் இருந்து விரைவான நடவடிக்கை அவசியம்” என்று பதிவிட்டிருந்தார்.

சச்சினின் இந்த பதிவுக்கு பதிலளித்துள்ள மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது எக்ஸ் பதிவில், “இந்த வீடியோவை பகிர்ந்ததற்கு நன்றி சச்சின். ஏஐ மூலம் உருவாக்கப்படும் டீப் ஃபேக் வீடியோக்கள் இந்திய பயனர்களின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கைக்கு அச்சுறுத்தலானவை. அவை சட்டத்தை மீறுகின்றன. இவற்றை கட்டுப்படுத்த ஐடி சட்டத்தின் கீழ் விரைவில் இறுக்கமான விதிமுறைகள் கொண்டு வரப்படும்” என்று உறுதியளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE