விமானம் புறப்படுவதில் தாமதம்: இண்டிகோ விமானியைத் தாக்கிய பயணி - வைரல் வீடியோ

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இண்டிகோ நிறுவனத்தின் விமானி மீது பயணி ஒருவர் தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக டெல்லியில் கடந்த சில நாட்களாக வெப்ப நிலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமை, 10 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன, சுமார் 100 விமானங்கள் தாமதமாகிவிட்டன. மேலும் சில விமானங்கள் டெல்லி விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இருந்து கோவா நோக்கி செல்ல இருந்த இண்டிகோ நிறுவனத்தின் 6E-2175 விமானம் பனிமூட்டம் காரணமாக தாமதமாக இயக்கப்பட்டது.

பயணிகள் நீண்ட நேரமாக காத்திருந்த நிலையில், மதியம் 1 மணி அளவில் விமான இயக்கம் குறித்து இண்டிகோ விமானத்தின் விமானி அறிவிப்பை வழங்கியிருக்கிறார். கடைசி வரிசையில் அமர்ந்து இருந்த பயணி ஒருவர், திடீரென நடந்துச் சென்று விமானியை தாக்கத் தொடங்கினார். இதனால், அதிர்ச்சியடைந்த சக பயணிகள் கூச்சலிட்டனர். விமானி மீது பயணி தாக்குதல் நடத்திய வீடியோ, சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் வேகமாக வைரலானது.

இந்தச் சம்பவம் தொடர்பாக இண்டிகோ விமானம் நிறுவனம் தரப்பில் டெல்லி போலிஸிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடியோவை ஆதாரமாக கொண்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். விமானியை அடித்த பயணியின் பெயர் சஹில் கத்தாரியா எனத் தெரிய வந்துள்ளது. பல்வேறு பயணிகள் விமான தாமதம் காரணமாக தாங்கள் பாதிக்கப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE