“ஒவ்வொரு நாடும் எங்களுடன் உடன்படுவார்கள் என்று உத்தரவாதம் அளிக்க முடியாது” - மாலத்தீவு விவகாரத்தில் ஜெய்சங்கர் கருத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “அரசியல் என்பது அரசியல்தான். ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவரும் எங்களை ஆதரிப்பார்கள் அல்லது எங்களுடன் உடன்படுவார்கள் என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது” என மாலத்தீவு விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2-ம் தேதி லட்சத்தீவு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது பயண அனுபவம் குறித்து எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதோடு, அங்கு எடுக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்களை பிரதமர் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, அதை விமர்சிக்கும் வகையில் சர்ச்சையான கருத்தை சமூக வலைதள பதிவு மூலமாக தெரிவித்திருந்தனர் மாலத்தீவு அமைச்சர்களான மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் மற்றும் அப்துல்லா மஹ்சூம் மஜித் ஆகியோர். இது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது.

இதற்கு இந்திய அரசு தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. அதே நேரத்தில் மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் மற்றும் எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். அங்கு ஆட்சியில் உள்ள முகமது முய்சு அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்ட சூழலில் சர்ச்சை கருத்து தெரிவித்த மூன்று அமைச்சர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால் இருநாட்டு அரசுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று மாலத்தீவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரர்களை மார்ச் 15க்குள் திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு அந்நாட்டு அதிபர் முகம்மது மொய்சு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள 'மந்தன்' என்ற டவுன்ஹாலில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “அரசியல் என்பது அரசியல்தான். ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவரும் எங்களை ஆதரிப்பார்கள் அல்லது எங்களுடன் உடன்படுவார்கள் என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளோம். பல சந்தர்ப்பங்களில் நாங்கள் வலுவான தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளோம். இந்தியா - மாலத்தீவு அரசியல் உறவில் கொந்தளிப்பு நிலவுகிறது ஆனால், மாலத்தீவில் உள்ள சாமானியர்களுக்கு இந்தியாவைப் பற்றி நல்ல அபிப்பிராயம் உள்ளது, இந்தியாவுடனான நல்லுறவின் முக்கியத்துவம் அவர்களுக்குத் தெரியும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE