“இண்டியா கூட்டணியே ஒரு ‘காணொலிக் கூட்டணி’தான்” - பாஜக விமர்சனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “இண்டியா கூட்டணியால் காணொலிக் கூட்டங்களை மட்டுமே நடத்த முடியும். ஏனென்றால் இண்டியா கூட்டணியே ஒரு காணொலிக் கூட்டணி. அவர்கள் சம்பிரதாயங்களுக்காக இது மாதிரியான கூட்டங்களை நடத்தி வருகின்றனர்” என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து இண்டியா கூட்டணியை உருவாக்கின. இந்தியா கூட்டணி தலைவர்கள் பாட்னா, பெங்களூரு, மும்பை, டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். இதுவரை எந்த ஒரு விஷயத்திலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் சனிக்கிழமை காணொலி காட்சி மூலம் இண்டியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் இந்தக் கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா டெல்லியில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியது: “பிரதமர் நரேந்திர மோடி வளர்ந்த இந்தியாவை உருவாக்க உழைத்து வருகிறார். அதோடு ஏழைகளின் வறுமையை நீக்கி வருகிறார். ஆனால் பிரதமர் மோடியை அகற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கின்றனர். இண்டியா கூட்டணியால் காணொலிக் கூட்டங்களை மட்டுமே நடத்த முடியும். ஏனென்றால், இண்டியா கூட்டணியே ஒரு காணொலிக் கூட்டணிதான். அவர்கள் சம்பிரதாயங்களுக்காக இது மாதிரியான கூட்டங்களை நடத்தி வருகின்றனர்

மு.கருணாநிதி, பிரகாஷ் சிங் பாதல் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தற்போது இல்லை. ஆனால் அவர்கள் எப்போதும் தங்களுடைய பிள்ளைகளின் அரசியல் எதிர்காலத்தைப் பற்றியே சிந்தித்தனர். தற்போது உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் ஊழல் செய்ததன் விளைவாக, சிபிஐ, ஐடி வழக்குகளை எதிர்கொள்கிறார்கள். ஓபிசிகளுக்காக பிரதமர் மோடி நிறைய நன்மைகளை செய்துள்ளார். இளைஞர்கள் எப்படியாயினும் அரசியலில் ஈடுபட வேண்டும். எது நல்லது எது கெட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இளைஞர்கள் தான் இந்திய நாட்டிற்கு சொத்து” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE