மோடி அரசின் 10 ஆண்டு கால அநியாயங்களை ‘நியாய யாத்திரை’ அம்பலப்படுத்தும்: காங்கிரஸ்

By செய்திப்பிரிவு

இம்பால்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கடந்த 10 ஆண்டு கால அநியாயங்களை ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ள இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை அம்பலப்படுத்தும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மணிப்பூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ள நிலையில், தலைநகர் இம்பாலில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயராம் ரமேஷ், “ராகுல் காந்தி நாளை தொடங்க உள்ள இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில், நரேந்திர மோடி அரசின் கடந்த 10 ஆண்டு கால அநியாயங்கள் அம்பலப்படுத்தப்படும். இந்த யாத்திரை தேர்தலுக்கானது அல்ல; மாறாக கருத்தியலுக்கானது. மக்களை பிளவுபடுத்துவது, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், அரசியல் எதேச்சாதிகாரம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஒரு சித்தாந்தத்தை எதிர்கொள்வதுதான் நாட்டின் முன் உள்ள மிகப் பெரிய சவால்.

அமிர்த காலத்தில் இந்தியா மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைய உள்ளதாக தங்கக் கனவுகளை நாட்டு மக்கள் முன் பிரதமர் மோடி வைக்கிறார். ஆனால் கடந்த 10 வருடங்களின் உண்மை என்ன? உண்மையில் அது ஓர் அநியாய காலம். கடந்த 10 ஆண்டுகளில் நடந்த அரசியல், பொருளாதார மற்றும் சமூக அநீதிகளை மனதில் கொண்டு இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இந்த யாத்திரை 15 மாநிலங்களில் உள்ள 100 மக்களவைத் தொகுதிகள் வழியாகச் செல்லும். இது ராகுல் காந்தியின் முந்தைய யாத்திரையைப் போல, மாற்றத்தை நிகழ்த்தும் யாத்திரையாக இருக்கும் என்று கட்சி நம்புகிறது.

மக்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப அரசு வாய்ப்பளிக்காததால் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை மீண்டும் நிலைநாட்டும் நோக்கில், இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை காங்கிரஸ் மேற்கொள்கிறது. இந்த யாத்திரை இம்பாலில் இருந்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. மாறாக, மணிப்பூரின் தௌபால் மாவட்டத்தில் உள்ள தனியார் மைதானத்தில் இருந்து யாத்திரை தொடங்கும்.

இந்த யாத்திரை 6,713 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இந்த யாத்திரையின் பெரும்பகுதி பேருந்து மூலமாக இருக்கும். அதேநேரத்தில், ஆங்காங்கே நடைபாதையாகவும் இருக்கும். இந்த யாத்திரை 67 நாட்களில் 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 337 சட்டமன்றப் பகுதிகளை கடந்து மார்ச் 20 அல்லது 21 ஆம் தேதி மும்பையில் முடிவடையும்” என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE