பொறுப்பை நிராகரித்த நிதிஷ் குமார் - இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் கார்கே?

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இண்டியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும், இண்டியா கூட்டணி சார்பில் இன்னும் அதிகாரபூர்வ தகவல் வெளியிடவில்லை.

வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்கும் முடிவுடன் 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைத்தன. இந்தக் கூட்டணிக்காக கட்சிகளை இணைக்கும் வேலைகளில் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் முக்கிய பங்காற்றினார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இக்கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது கூட்டம் ஜூலையில் பெங்களூருவில் நடைபெற்றது. அப்போதுதான் கூட்டணிக்கு 'இண்டியா' என்ற பெயரும் சூட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, மூன்றாவது கூட்டம் மும்பையில் நடைபெற்றது.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகம், தொகுதிப் பங்கீடு உள்ளிட்வை குறித்து ஆலோசனை செய்வதற்காக இண்டியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று காணொலி வாயிலாக தொடங்கியது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில்தான் இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

முன்னதாக, பிஹார் முதல்வர் நிதீஷ் குமாரை இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை ஏற்க வலியுறுத்திய நிலையில், அவர் மறுத்துவிட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான ரேஸில் இருந்த தலைவர்களில் நிதீஷ் குமார் முதன்மையானவர். ஆனால், இன்றைய கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை ஏற்க மறுத்ததுடன் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவர் பொறுப்பேற்க வேண்டும் என்று நிதீஷ் குமார் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. அதன்படி, மல்லிகார்ஜுன கார்கே இண்டியா கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இண்டியா கூட்டணி உருவாகிய சமயத்தில் பிரதமர் வேட்பாளர், ஒருங்கிணைப்பாளர் தேர்வு, தொகுதிப் பங்கீடு போன்ற பல சவால்கள் முன்வைக்கப்பட்டன. இதில் கார்கே தேர்வு மூலம் ஒருங்கிணைப்பாளர் சவால் முடிவுற்றாலும் தொகுதிப் பங்கீடு போன்றவை அடுத்த சவால்கள் இண்டியா கூட்டணிக்கு எழுந்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE