“நான் முன்னாள் முதல்வர். மக்களால் நிராகரிக்கப்பட்டவர் அல்ல” - சிவராஜ் சிங் சவுகான்

By செய்திப்பிரிவு

போபால்: “தற்போது நான் முன்னாள் முதல்வர் என்று அழைக்கப்படுகிறேன். ஆனால், நான் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் அல்ல” என மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியிருப்பது அரசியலில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

மத்தியப் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் பாஜக 163 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முதல்வராக இருந்த சிவ்ராஜ் சிங் சவுகான் மாநிலம் முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். கடந்த முறை பெற்ற வெற்றியைவிட இம்முறை மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து, சிவ்ராஜ் சிங் சவுகான் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என பரவலான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், மத்தியப் பிரதேச முதல்வராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். அதிலிருந்து பாஜகவின் முக்கிய முகமாக இருந்த சிவராஜ் சிங் சவுகான் ஓரங்கட்டப்படுவதாக செய்திகள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், புனேயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறும்போது, “தற்போது நான் முன்னாள் முதல்வர் என்று அழைக்கப்படுகிறேன். ஆனால், நான் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் அல்ல. நீண்ட காலம் முதல்வர் பதவியில் இருந்த ஒருவர் பதவி விலகினால், அவரை விமர்சனத்துக்கு உள்ளாகும் நிகழ்வுகள் நடக்கும். ஆனால், நான் பதவியில் இருந்து விலகிய பிறகு எங்கு சென்றாலும் மக்கள் என்னை மாமா (Mama) என அன்புடன் அழைக்கின்றனர். மக்களுடைய அன்பே எனக்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம்.

முதல்வர் பதவியில் இருந்து விலகினாலும், தீவிர அரசியலில் இருந்து விலகவில்லை. நான் பதவிக்காக அரசியலில் இல்லை. நான் ஒருபோதும் அராஜகமாக பேச மாட்டேன். 11 தேர்தல்களில் வென்றுள்ளேன். ஆனால், ஒரு தேர்தலில் கூட எனக்காக நான் பிரச்சாரம் செய்ததே கிடையாது. வேட்புமனு தாக்கலுக்கு முதல் நாள் தான் தொகுதிக்கு செல்வேன். தேர்தலில் நேர்மையாக போட்டியிட்டால், மக்கள் உங்களுக்கு ஆதரவு வழங்குவார்கள்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE