பிஹார் | பாட்னா பள்ளியில் மதிய உணவு சமைக்க பெஞ்சுகள் எரிப்பு: விசாரணைக்கு உத்தரவு

By செய்திப்பிரிவு

பாட்னா: பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள பள்ளி ஒன்றில் பெஞ்சுகளை எரித்து மாணவர்களுக்கு மதிய உணவு சமைக்கப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாட்னா மாவட்டம் பிஹ்தா பகுதியில் உள்ள தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளியில் அங்குள்ள பெஞ்சுக்களை எரித்து மாணவர்களுக்கான மதிய உணவு சமைக்கப்பட்டது. இதுகுறித்து பள்ளியின் சமையல் ஊழியர்கள் கூறும்போது, “சமைப்பதற்கு விறகுகள் இல்லை. ஆசிரியர் சவிதா குமாரி தான் பெஞ்சுகளை பயன்படுத்தி சமைக்கச் சொன்னார்” என்று குற்றஞ்சாட்டினர். மேலும், சவிதா குமாரி அதனை வீடியோ எடுத்ததாகவும், பின்னர் அது வைரலானதாகவும் ஒரு ஊழியர் தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டினை மறுத்துள்ள ஆசிரியர் சவிதா குமாரி, "சமையல் ஊழியர்கள் தன்னை சிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் தான் பெஞ்சுக்களை எரித்து சமைக்க உத்தரவிட்டார்" என்று குற்றம்சாட்டினார்.

ஆசிரியரின் குற்றச்சாட்டினை நிராகரித்துள்ள தலைமை ஆசிரியர் பிரவீன் குமார் ரஞ்சன், "இது ஒரு மனித பிழை. சமையல் ஊழியர்கள் படிக்காதவர்கள். கல்வித்துறையின் உத்தரவினைத் தொடர்ந்து நாங்கள் மதிய உணவுத் தயாரிக்க சமையல் எரிவாயுவைத்தான் பயன்படுத்துகிறோம். அந்தக் குறிப்பிட்ட நாளில் வெளியே மிகவும் குளிராக இருந்ததால் ஊழியர்கள் பெஞ்சுகளை விறகாக பயன்படுத்தியுள்ளனர்" என்று கூறினார்.

இந்த சம்பவத்தை கவனத்தில் எடுத்துக் கொண்ட வட்டார கல்வி அதிகாரி, நவீஷ் குமார், “அந்த வீடியோ ஆய்வு செய்யப்பட்டு குற்றம் புரிந்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE