மும்பை - நவி மும்பை இடையே ரூ.17,843 கோடியில் உருவான ‘அடல் சேது’ கடல்வழி பாலம் திறப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பை - நவி மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ள ‘அடல் சேது’ பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை மற்றும் அருகில் உள்ளநவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ. தூரத்துக்கு பிரம்மாண்ட கடல் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிக நீளமான கடல்வழி பாலம் என்ற சிறப்பை பெற்றுள்ள இந்த பாலம், மும்பை சிவ்ரி பகுதியில் தொடங்கி நவிமும்பை புறநகரான சிர்லேவில் முடிவடைகிறது. நவிமும்பை நவசேவா துறைமுகத்தை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், இது ‘மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க்’ (துறைமுக இணைப்பு பாலம்) என அழைக்கப்படுகிறது.

5 ஆண்டுகள் நடந்த பணி: இந்த கடல்வழி பாலத் திட்டத்துக்கு ‘அடல் சேது' என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டது. இப்பாலத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். 2018 ஏப்ரல் 24-ம் தேதி கட்டுமான பணி தொடங்கியது. 5 ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவந்த பணிகள் கடந்த மாதம் முடிவடைந்தன.

ரூ.17,843 கோடி செலவில் 6 வழிச்சாலையாக மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த விழாவில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணைமுதல்வர்கள் தேவேந்திர பட்னாவீஸ், அஜித் பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ‘அடல் சேது’ திட்டத்துக்கான நிதியுதவியை வழங்கிய ஜப்பான் அரசுக்கு நன்றி. இந்த நேரத்தில், மறைந்த ஜப்பான் தலைவர் ஷின்சோ அபேவை நினைத்துப் பார்க்கிறேன். இந்த மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க் திட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைக்க அப்போது நாங்கள் உறுதிபூண்டோம். வளர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய மைல் கல் சாதனையாக அடல் சேது பாலம் உள்ளது. வளர்ந்த இந்தியா எப்படி இருக்கும் என்பதற்கான சாட்சியாக இது இருக்கும்.

வளர்ந்த இந்தியாவில், அனைவருக்கும் வசதிகள், வளங்கள், செழிப்பு இருக்கும், எதிலும் வேகம்இருக்கும், எல்லாவற்றிலும் முன்னேற்றம் இருக்கும் என்று நம்புகிறேன். எந்த தடையும் இல்லாமல் வாழ்க்கை, வாழ்வாதாரம் சீராக, வேகமாக செல்ல வேண்டும் என்பதே அடல் சேது பாலம் நமக்கு கூறும் செய்தி.

நாட்டின் மிக பெரிய திட்டங்களை தொடங்கிய தலைவர்கள், அவர்களது காலத்திலேயே அதை செய்துமுடிப்பது கடினம் என்று மக்கள்நினைத்தனர். ஆனால், நாட்டில்மாற்றம் வரும் என்று உறுதியளித்தேன். அதுதான் ‘மோடி உத்தரவாதம்’. ‘விக்சித் பாரத்' (நமது லட்சியம், வளர்ச்சியடைந்த பாரதம்’)என்ற உறுதியுடன், உலகின் மிக நீளமான கடல் பாலங்களில் ஒன்றான அடல் சேதுவை நாடு பெற்றுள்ளது. இது நாட்டு மக்களுக்கு மிகவும் இனிப்பான செய்தி. இவ்வாறு பிரதமர் பேசினார்.

100 கி.மீ. வேகம்: ‘அடல் பிஹாரி வாஜ்பாய் சிவ்ரி -நவசேவா அடல் சேது’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்பாலம் 22 கி.மீ. நீளமுள்ள 6 வழிப் பாலம் ஆகும். இதில் 16.5 கி.மீ தூரத்துக்கு கடலிலும், 5.5 கி.மீ. தூரத்துக்கு நிலத்திலும் அமைந்துள்ளது. இப்பாலத்தில் கார்கள் 100 கி.மீ. வேகம் வரை செல்லலாம். கார்கள், டாக்ஸிகள், இலகு ரக வாகனங்கள், மினி பேருந்துகள், இரு அச்சு கொண்டவாகனங்கள் இதில் செல்ல முடியும்.

பைக், 3 சக்கர வாகனங்கள், டிராக்டர்கள் மற்றும் மெதுவாக செல்லும் வாகனங்கள் இதில் செல்ல அனுமதி இல்லை. இந்தபாலம் மூலம், மும்பை - நவிமும்பை இடையே 15 கி.மீ. பயண தூரம் குறையும். பயண நேரமும் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து 20 நிமிடமாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு விரைவான இணைப்பை வழங்கும். மும்பையில் இருந்து புனே, கோவா மற்றும் தென் இந்தியாவுக்கான பயண நேரத்தையும் குறைக்கும் என்று கூறப்படுகிறது.

நிலநடுக்கத்தையும் தாங்கும்: இந்த கடல் பாலத்தை மும்பை ஐஐடியை சேர்ந்த 6 வல்லுநர்கள் கொண்ட குழு வடிவமைத்துள்ளது. ‘‘நிலநடுக்கம் ஏற்படும் அபாயமண்டலத்துக்குள் மும்பை வருவதால் அதற்கேற்ப பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடும் நிலநடுக்கத்தையும் தாங்கும் வகையில் உறுதியான கட்டமைப்புடன் பாலம் அமைக்கப்பட்டுள்ளது’’ என்று மும்பை ஐஐடியின் சிவில் இன்ஜினீயரிங் துறைதலைவர் பேராசிரியர் தீபாங்கர் சவுத்ரி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

12 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்