“அரசியலில் இயங்கும் இளைஞர்கள் அடிக்கடி கட்சி மாறக் கூடாது” - வெங்கைய்ய நாயுடு

By செய்திப்பிரிவு

புனே: அரசியலில் இருக்கும் இளைஞர்கள் அடிக்கடி கட்சி மாறக் கூடாது என்று முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்ய நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள எம்ஐடி அரசு பள்ளி மற்றும் எம்ஐடி உலக அமைதி பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய வெங்கைய்ய நாயுடு, “மாணவர்களுக்கு எனது அறிவுரை, அரசியலில் சேருங்கள். ஆக்கபூர்வமாக செயல்படுங்கள்; கவனமாக இருங்கள். அடிக்கடி கட்சி மாறாதீர்கள். யார் எந்த கட்சியில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வது தற்போது கடினமாக இருக்கிறது. நான் நாடு முழுவதும் பயணிக்கிறேன். பல இடங்களில் பேசும்போது ஒருவரை குறிப்பிடும்போது அவரது கட்சியையும் குறிப்பிடுவேன். ஆனால், தற்போது அவர் அந்தக் கட்சியில் இல்லை என சொல்வார்கள். இது ஜனநாயகத்துக்கு அவமானகரமானது.

வளரும் அரசியல்வாதிகளுக்கு எனது அறிவுரை என்னவென்றால், கொள்கையோடு நெருக்கமாக இருங்கள். நீங்கள் இருக்கும் கட்சியில் உள்ள தலைவர் திமிர்பிடித்தவராக, சர்வாதிகாரியாக இருக்கிறாரா, அப்படியானால் அது குறித்து கட்சிக்குள் விவாதியுங்கள். விவாதித்து முடிவெடுங்கள். இதுதான் வழி. மாறாக, அந்தக் கட்சியை விட்டு வேறு கட்சிக்கு மாறுவது சகஜமானால், மக்களுக்கு அரசியல் மீது மரியாதை இருக்காது.

மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கட்சியை அடிக்கடி மாற்றிக்கொண்டால், மக்களுக்கு அரசியல் மீது ஆர்வம் போய்விடும். இது ஜனநாயகத்துக்கு கேடு. அரசாங்கம் தவறிழைக்கும்போது எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த வேண்டும்; தவறு நிகழாமல் தடுக்க வேண்டும். அவர்கள் தவறான நடவடிக்கைகளைத்தான் எதிர்க்கிறார்களே தவிர அரசாங்கத்தை அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ வேண்டும். அவர்கள் சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற செயல்பாடுகளை முடக்கக் கூடாது” என்று அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE