‘துடிப்பான குஜராத்’ மாநாடு | வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்ற மோடி சபதம்

By செய்திப்பிரிவு

காந்தி நகர்: வரும் ஆண்டுகளில் சர்வதேச அளவிலான முதல் 3 பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும் என்பதற்கு, தான் உத்தரவாதம் தருவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார்.

‘துடிப்பான குஜராத்’ உலகளாவிய உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: 10 ஆண்டுகளுக்கு முன்பு உலக பொருளாதார வரிசையில் இந்தியா 11-வது இடத்தில் இருந்தது. இன்று 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. வரும் ஆண்டுகளில் உலகின் முதல் 3 பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் இடம்பெறும் என்பது பல்வேறு தரப்பினரின் கருத்து. ஆனால், அது நடக்கும் என்பதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்.

நம்நாடு 75-வது சுதந்திர தினத்தை அண்மையில் கொண்டாடியது. இந்த நிலையில், அடுத்த 25 ஆண்டு கால வளர்ச்சிக்கு தேவையான வியூகங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் நேரத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்பதே எங்களின் இலக்கு. எனவே, இந்த 25 ஆண்டு காலம் இந்தியாவின் அமிர்த காலமாகும்.

உலகளாவிய சவால்களை எதிர்கொண்டபோதிலும் கூட கட்டமைப்பு சீர்திருத்தங்களில் ஒரு தசாப்த காலம் கவனம் செலுத்தி வருவதே இந்தியாவின் ஈர்க்கக்கூடிய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணம். மத்திய அரசு மேற்கொண்ட சீர்த்திருத்தங்கள் இந்தியப் பொருளாதாரத்தின் திறன் மற்றும் போட்டித் தன்மையை மேம்படுத்தியுள்ளன.

‘துடிப்பான குஜராத்' சர்வதேச உச்சி மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவதன் முக்கிய நோக்கம் முதலீடுகளை மற்ற மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல பிறநாடுகளிலிருந்தும் கொண்டு வருவதையும் மையமாகக் கொண்டதே.

எனவே, இந்த மாநாட்டில் பங்கேற்கும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவின் வளர்ச்சி பயணத்தின் முக்கிய கூட்டாளிகளே. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

‘துடிப்பான குஜராத்' சர்வதேச உச்சி மாநாடு கடந்த 2003 தொடங்கி 9 பதிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது நடைபெறும் மாநாடு 10-வது பதிப்பாகும். வணிக நிறுவனங்கள் - அரசு அதிகாரிகள் முன்னிலையில் குஜராத்தில் முதலீடு செய்வதற்கான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இம்மாநாட்டில் மேற்கொள்ளப்படுகின்றன.

வெற்றிகரமான பிரதமர் மோடி: இந்த சர்வதேச உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவரும், நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி பேசியது: இந்திய வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான பிரதமராக நரேந்திர மோடி திகழ்ந்து வருகிறார். அவரது தலைமையின் கீழ் குஜராத் இன்று புதிய இந்தியாவின் முகமாக மாறியுள்ளது. நமது சம காலத்தின் மிகச் சிறந்த உலகத் தலைவராக அவர் உருவெடுத்துள்ளார்.

ரிலையன்ஸை பொறுத்தவரை அடிப்படையில் எப்போதும் குஜராத் நிறுவனமாகவே செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக ரிலையன்ஸ் 150 பில்லியன் டாலரை அதாவது ரூ.12 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளது. இதில், மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான தொகை குஜராத்தில் மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அம்பானி தெரிவித்தார்.

2029-க்குள் குஜராத்தின் ஹசிரா நகரத்தில் உலகின் மிகப்பெரிய உருக்கு உற்பத்தி ஆலையை உருவாக்க உள்ளதாக ஆர்சிலர் மிட்டல் தெரிவித்தார். இந்த ஆலை ஆண்டுக்கு 24 மில்லியன் டன் கச்சா உருக்கை உற்பத்தி செய்யும் திறனை கொண்டிருக்கும் எனவும் அவர் கூறினார்.

மாருதி சுஸுகி ரூ.35,000 கோடி: குஜராத்தில் ரூ.35,000 கோடி முதலீடுகளை மேற்கொள்ள உள்ளதாக சுஸுகி மோட்டார் நிறுவன தலைவர் தோஷிரோ சுஸுகி தெரிவித்தார். 2028-29 நிதியாண்டு முதல் இப்புதிய ஆலை செயல்பாட்டுக்கு வரும். எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பை ஊக்குவிக்க ரூ.3,200 கோடியில் 4-வது அலகு உருவாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE