ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரை’க்கு மணிப்பூர் அரசு அனுமதி மறுப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மணிப்பூரில் உள்ள அரண்மனை மைதானத்தில் தொடங்க அம்மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

மணிப்பூரில் இருந்து மும்பை வரை ‘பாரத் நியாய யாத்திரை’ என்கிற பெயரில் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி யாத்திரை நடத்தவுள்ளார். வருகிற ஜனவரி 14 முதல் மார்ச் 20 வரை இந்த யாத்திரை நடைபெறும் என சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இந்நிலையில், ராகுல் காந்தியின் பாரத் நியாய யாத்திரையை மணிப்பூரில் உள்ள அரண்மனை மைதானத்தில் தொடங்க அம்மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது.

அதாவது, மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தின் ஹட்டா கங்ஜெய்புங் மைதானத்தில் இருந்து ஜனவரி 14-ஆம் தேதி பேரணியைத் தொடங்க அனுமதி கோரி மாநில காங்கிரஸ் கட்சி ஜனவரி 2-ஆம் தேதி எழுத்துபூர்வமாக விண்ணப்பித்தது. இருப்பினும் சரியான பதில் கிடைக்காததால், மணிப்பூர் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மேகச்சந்திர சிங் தலைமையிலான குழு புதன்கிழமை முதல்வர் பிரேன் சிங்கை சந்தித்தது. இருப்பினும் அது பலன் தரவில்லை. சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை காரணம்காட்டி அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து மேகச்சந்திர சிங் கூறும்போது “அரசாங்கத்தின் பதில் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த யாத்திரை ஓர் அரசியல் நிகழ்ச்சி அல்ல. இது மக்களுக்கான திட்டம். எனவே, மணிப்பூர் மற்றும் இந்திய மக்களின் ஆதரவுடன் திட்டமிட்டபடி பேரணியை நடத்துவோம்” என்றார்.

பாரத் ஜோடோ யாத்திரையின்போது 4,500 கி.மீ பயணம் செய்த ராகுல், தற்போது இந்த யாத்திரையில் 6,200 கிமீ தூரம் பயணிக்க உள்ளார். இம்முறை மணிப்பூர், நாகலாந்து, அசாம், மேகாலயா, மேற்கு வங்கம், பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் செய்கிறார். வரும் 2024 மே மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராகுல் காந்தியின் பாரத ஜோடோ நியாய யாத்திரை தேசிய அரசியலில் மிகவும் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE