4 வயது மகனை பெண் சிஇஓ கொலை செய்த வழக்கு - விசாரணை தொடர்வதாக கோவா முதல்வர் தகவல்

By செய்திப்பிரிவு

பாஞ்சி: கோவாவில் தனது நான்கு வயது மகனைக் கொலை செய்த குற்றத்துக்காக கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட பெண் சிஇஓவிடம் விசாரணை தொடர்வதாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று கூறுகையில், "போலீஸார் ஏதோ ஒன்றை கண்டறிந்தவுடன் அந்தப் பெண் கைது செய்யப்பட்டார். விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது. போலீஸார் விரைவில் இந்த வழக்கை முடித்து விடுவார்கள்" என்று தெரிவித்தார்.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை பெங்களூருவிலுள்ள ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் சிஇஓவான சுசனா சேத், கோவாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது 4 வயது மகனை கொலை செய்த குற்றச்சாட்டில் கர்நாடகாவின் சித்ரதுர்காவில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், கடந்த சனிக்கிழமை அன்று வடக்கு கோவாவின் கண்டோலிமில் உள்ள சோல் பன்யன் கிராண்டே என்ற ஹோட்டலுக்கு தனது நான்கு வயது மகனுடன் வந்த சுசனா சேத், தான் பெங்களூரு திரும்பிச் செல்ல டாக்ஸியை ஒன்றை முன்பதிவு செய்யுமாறு ஹோட்டல் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.

டாக்ஸி வந்ததும் தனது அறையில் இருந்து பெரிய பையுடன் தனியாக வந்துள்ளார் சுசனா. ஹோட்டலுக்கு வரும்போது தனது நான்கு வயது மகனுடன் வந்த சுசனா, திரும்பி செல்லும்போது தனியாக செல்வதை கவனித்த அங்கிருந்த ஊழியர்கள், அவர் சென்றதும் தங்கியிருந்த அறையை சுத்தம் செய்ய சென்றுள்ளனர். அப்போதும் ரூமில் சிவப்பு நிறக் கறைகளைக் கண்ட ஊழியர்கள், அந்தக் கறை இரத்தம் என்பதை உறுதி செய்தவுடன் சந்தேகம் அடைந்து உடனடியாக கோவா போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

போலீஸார் ஹோட்டலை அடைந்து, டாக்ஸி டிரைவர் மூலம் சுசனாவை தொடர்பு கொண்டுள்ளனர். அவரிடம் அவரின் மகனைப் பற்றி விசாரிக்கின்றனர். அதற்கு, தனது நண்பர் ஒருவரின் வீட்டில் மகனை விட்டுவிட்டதாக கூறிய சுசனா, தவறான முகவரி ஒன்றையும் அளித்துள்ளார். அவர் கொடுத்த முகவரி போலி என்று தெரிந்ததும் டாக்ஸி டிரைவரின் உதவியுடன் சுசனாவை போலீஸார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சுசனாவை ஆறு நாள் போலீஸ் காவலில் வைக்க கோவா நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, பெற்ற மகனை கொலை செய்த பின்னணி குறித்து சுசனாவிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் திருமண வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரிவால் இந்தக் கொலையை சுசனா செய்திருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர். சுசனா சேத், கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். 2010-ல் இவர்கள் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்த நிலையில், இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர்.

விவாகரத்து நடவடிக்கைகள் 2022-ல் தொடங்கிய நிலையில், சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள் இருவர் பிரிவதையும் உறுதிப்படுத்தியுள்ளது. கூடவே, ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் தந்தையுடன் மகன் நேரத்தை செலவிட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் சுசனா சேத் அதிருப்தி அடைந்ததாக அவரிடம் விசாரணை நடத்தி வரும் போலீஸார் தெரிவித்துள்ளனர். கொலைக்கு இதுதான் காரணமா என்கிற கோணத்தில் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE