மகாராஷ்டிரா சபாநாயகருக்கு எதிராக உத்தவ் தாக்கரே உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம்

By செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேகருக்கு எதிராக சிவ சேனா(UBT) தலைவர் உத்தவ் தாக்கரே, உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக மும்பையில் உள்ள தனது மாதோஸ்ரீ இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, "முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரோடு சேர்ந்து தனி அணியாக செயல்பட்ட எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரும் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக மகாராஷ்டிர சபாநாயகர் ராகுல் நர்வேகர் டிசம்பர் 31, 2023க்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் பின் மேலும் 10 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. ஆனால், இதுவரை சபாநாயகர் தனது உத்தரவை அறிவிக்கவில்லை. இந்நிலையில், இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் முன்பாக அவர் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து பேசி உள்ளார். நீதிபதி குற்றவாளியை சந்தித்துப் பேசுவது போன்றது இது.

சபாநாயகரின் செயல் அவர் மீது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் நியாயமாக தீர்ப்பளிப்பாரா என்ற சந்தேகம் நியாயமானதே. அதோடு, தனது தீர்ப்பை மேலும் தள்ளிப் போடுவதற்கான திட்டமாகவும் இருக்கலாம். எனவே, இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நாங்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளோம். சபாநாயகர் சார்பற்ற முறையில் நடந்து கொள்ள வேண்டும். ஆனால், அவரது செயல்பாடு சார்பற்றவராக அவர் இருப்பாரா, சார்பற்ற முறையில் தனது கடமையை ஆற்றுவாரா என்ற பெருத்த சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரேவின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள சபாநாயகர் ராகுல் நர்வேகர், "ஏக்நாத் ஷிண்டே முதல்வர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர். சட்டப்பேரவை விவகாரம் தொடர்பாக நாங்கள் சந்தித்துக்கொள்வது முக்கியம். அதோடு, நானும் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர். எனது தொகுதியில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முதல்வரிடம் பேசுவதும் அவசியம். இதற்கு உள்நோக்கம் கற்பிப்பிப்பது தவறு. இது தொடர்பாக யாருக்கும் விளக்கம் அளிக்க வேண்டிய தேவை இருப்பதாக நான் நினைக்கவில்லை. பாஜகவைச் சேர்ந்த நான், உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த எம்பி அணில் தேசாய் மற்றும் ஷரத் பவார் அணியைச் சேர்ந்த ஜெயந்த் பாடில் ஆகியோரை நான் விமான நிலைய வரவேற்பரையில் சந்தித்துப் பேசினேன். அதற்கும் உள்நோக்கம் கற்பிப்பார்களா? அரசியல் சாசனத்துக்கு உட்பட்டும், மரபுகளுக்கு உட்பட்டும் இவ்விஷயத்தில் நான் முடிவை எடுப்பேன். எனது முடிவு தகுதியின் அடிப்படையில் இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, "நாங்கள் சட்டவிரோதமாக எந்த செயலையும் செய்யவில்லை. அரசியல் சாசனத்துக்கு உட்பட்டே எங்கள் அரசு அமைக்கப்பட்டது. முதல் நாள் தொடங்கி எங்களிடம் பெரும்பான்மை உள்ளது" என தெரிவித்துள்ளார். "ஏக்நாத் ஷிண்டே தரப்பு வாதங்கள் வலிமையானவை. நாங்கள் சட்டப்படியான அரசை அமைத்துள்ளோம். சபாநாயகரின் உத்தரவின் மூலம் நாங்கள் நீதியைப் பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மகாராஷ்டிர அரசு நேற்று நிலையானதாக இருந்தது. நாளையும் நிலையானதாகவே இருக்கும்" என மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஏக்நாத் ஷிண்டே அணியினரை தகுதி நீக்கம் செய்யக் கோரும் கோரிக்கை மீது சபாநாயகர் ராகுல் நர்வேகர் இன்று மாலை 4 மணிக்குப் பிறகு தனது முடிவை அறிவிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE