‘துடிப்பான குஜராத்’ 10-வது உச்சி மாநாடு தொடக்கம்: ரூ.2 லட்சம் கோடி முதலீடு அறிவித்த அதானி

By செய்திப்பிரிவு

காந்தி நகர்: குஜராத் மாநிலம் காந்தி நகரில் ‘துடிப்பான குஜராத்’ 10-வது உச்சி மாநாடு இன்று( ஜன.10) பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. சர்வதேச நிறுவனங்களின் பார்வையை குஜராத் மாநிலத்தை நோக்கி திருப்பும் வகையில் ‘துடிப்பான குஜராத்’ 10-வது உச்சி மாநாடு நடத்தப்படுகிறது. பிரதமர் மோடி குஜராத் மாநில முதல்வராக இருக்கும்போது முதலீடுகளை ஈர்க்க தொடங்கப்பட்ட திட்டமே ‘துடிப்பான குஜராத்’. இது தற்போது 10-வது பதிப்பை எட்டியுள்ளது. அதன்படி, பிரதமர் மோடி இன்று அந்த நிகழ்வை தொடங்கிவைத்தார்.

இந்த மாநாட்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான், திமோர் அதிபர் ஜோஸ் ராமோஸ் ஹோர்டா போன்ற உலக தலைவர்களும், பெரிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர். இவர்களை சந்திக்கவுள்ள பிரதமர் மோடி, குஜாரத்தில் செய்யவுள்ள முதலீடுகள் குறித்தும் ஆலோசிக்க இருக்கிறார். அதன்படி, பிரதமர் மோடி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரை முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் சந்தித்தனர். அப்போது இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் வளர்ச்சித் திட்டங்களுக்காக நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

இதேபோல், சேல்ஸ்ஃபோர்ஸ், அபோட், பிளாக்ஸ்டோன், எச்எஸ்பிசி, யுபிஎஸ், மைக்ரான், சிஸ்கோ, எஸ்ஹெச்ஆர்எம் போன்ற 35 பார்ச்சூன் அமெரிக்க நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டு முதலீடுகள் குறித்து விவாதிக்க உள்ளன.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களாக முகேஷ் அம்பானி மற்றும் அதானி ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் பேசிய முகேஷ் அம்பானி, “இந்த உச்சி மாநாடு பிரதமர் நரேந்திர மோடிக்கான மரியாதை செலுத்தும் நிகழ்வு. பிரதமர் மோடி பேசும்போது, உலகமே கேட்கிறது” என்றார். மேலும், “2036 ஒலிம்பிக்கை இந்தியா நடத்தும். குஜராத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பெரிய முதலீடுகளை மேற்கொள்ளும்” என்றும் முகேஷ் அம்பானி கூறினார். கவுதம் அதானி பேசுகையில், “அடுத்த ஐந்து ஆண்டுகளில், அதானி குழுமம் குஜராத்தில் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்யும்” என்று அறிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE