10-வது உச்சி மாநாடு இன்று தொடக்கம் | ‘துடிப்பான குஜராத்’ சர்வதேச கண்காட்சி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

காந்தி நகர்: ‘துடிப்பான குஜராத்’ 10-வது உச்சி மாநாடு இன்று நடைபெறவுள்ள நிலையில் சர்வதேச வர்த்தக கண்காட்சி 2024 நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி காந்தி நகரில் நேற்று தொடங்கி வைத்தார்.

சர்வதேச நிறுவனங்களின் பார்வையை குஜராத் மாநிலத்தை நோக்கி திருப்பும் வகையில் ‘துடிப்பான குஜராத்’ 10-வது உச்சி மாநாடு இன்று தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு காந்தி நகரில் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்படும் சர்வதேச வர்த்தக கண்காட்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

காந்தி நகரில் உள்ள ஹெலிபேட்மைதானத்தில் 2 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் நடத்தப்படும் இந்த வர்த்தக கண்காட்சியில் 100 நாடுகள் பங்கேற்பதுடன், 33 நாடுகள் பங்குதாரர்களாக இணைகின்றன. வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தகண்காட்சியை இன்றும், நாளையும் பார்வையிடலாம். அதன் பிறகு, இரண்டு நாட்கள் பொதுமக்களின் பார்வைக்காக திறந்துவிடப்பட உள்ளது.

சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஆஸ்திரேலியா, தென் கொரியா, சிங்கப்பூர், யுஏஇ, இங்கிலாந்து, ஜெர்மனி, நார்வே, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கலந்து கொண்டுள்ளன.

பல்வேறு துறைகளில் நடந்து வரும் ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை எடுத்துக்காட்டும் வகையில்100-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல், ஆட்டோமொபைல், வாகன உதிரிபாகங்கள், மட்பாண்டங்கள, ரசாயனங்கள், பெட்ரோ கெமிக்கல்ஸ், நவரத்தினங்கள்-ஆபரணங்கள், மருந்து போன்ற பல்வேறு துறைகளின் அதிநவீன தயாரிப்புகள் மற்றும் சேவைகள் இந்த கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.

மேலும், ஜவுளி, ஆடை, மின்சாரம், பசுமை ஹைட்ரஜன், விமானம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் ஆகிய துறைகள் இந்த வர்த்தககண்காட்சியின் மையப்புள்ளிகளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ‘துடிப்பானகுஜராத்’ சர்வதேச உச்சி மாநாட்டைகாந்தி நகரின் மகாத்மா மந்திரில்பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE