ஓம்காரேஷ்வர் அணை அருகே நர்மதா நதியில் ரூ.3,950 கோடி செலவில் மிதக்கும் சோலார் மின் உற்பத்தி நிலையம்

By செய்திப்பிரிவு

நர்மதா நதியில் 3,950 கோடியில் மிதக்கும் சோலார் (சூரிய ஒளி) மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக மார்ச் மாதத்தில் 278 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய மத்திய பிரதேச மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

பெருகி வரும் மின் தேவையாலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் சூரிய ஒளி மின்சாரத்தை (சோலார்) உற்பத்தி செய்வதில் மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில், மத்திய பிரதேசத்தில் தண்ணீரில் மிதக்கும் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள காண்ட்வா மாவட்டம் புலமா தாலுகாவில், ஓம்காரேஷ்வர் அணை அருகே 2 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நர்மதா நதியில் ரூ.3,950 கோடியில், மத்திய அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் நிலையத்தை மாநில அரசு அமைத்து வருகிறது.

2021-ல் பணி தொடங்கி 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக 278 மெகாவாட், 2-ம் கட்டமாக 322 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டப் பணிகள்மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும். இதுவரை 100 மெகாவாட் மின்உற்பத்திக்கான பணிகள் முடிவடைந்துள்ளன.

மத்திய பிரதேச மாநிலத்தில் நர்மதா நதியின் மையப் பகுதியில் 160 டன் எடையைத் தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் மின்மாற்றி நிலையம்.

தனியார், பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 600 மெகாவாட் மின் உற்பத்திக்காக 2 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

முதல்கட்டமாக 278 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய, சக்தாபூர் பகுதியில் ரூ.128 கோடியில் 220 கிலோ வாட் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், 12 லட்சம் டன் கார்பன் உமிழ்வு தவிர்க்கப்படும், அணை நீர்த்தேக்கத்தில் இருந்துதண்ணீர் ஆவியாவது தடுக்கப்பட்டு, 60 முதல் 70 சதவீதம் தண்ணீர்சேமிக்கப்படும் என்று மத்திய பிரதேச எரிசக்தி துறையின் மத்திய ஷேத்ர வித்யுத் வித்ரன் நிர்வாக இயக்குநர் கணேஷ் ஷங்கர் தெரிவித்தார்.

மேலும், தரைப் பகுதியில் அமைக்கப்படும் சோலார் மின் திட்டத்தால் 36,000 கிலோ லிட்டர் தண்ணீர் செலவாகும். நதியின் மீது அமைக்கப்படுவதால் அந்த தண்ணீர் சேமிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து ரேவா நிறுவன திட்ட மேலாளர் ராகவன் கூறும்போது, "300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதற்கு, 5 லட்சம் சோலார் தகடுகள் தேவை. தற்போது 2 லட்சம் சோலார் தகடுகள் நீரில் பொருத்தப்பட்டுள்ளன. மார்ச் மாதத்தில் மின் உற்பத்தி தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்.

பிப்ரவரியில் 100 மெகாவாட் மின் உற்பத்தியை சோதனை ஓட்டமாக தயாரிக்க உள்ளோம். இதற்கான உற்பத்தி செலவு யூனிட்டுக்கு ரூ.3.21. முதல்கட்டப் பணிகள் முடிவடைந்து மார்ச் மாதத்தில் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது 278 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இதை 4.56 லட்சம்வீடுகளுக்கு வழங்கலாம்" என்றார்.

நர்மதா நதியில் ஓம்காரேஷ்வர் அணையின் அருகே காமன்ஹெடா, ஏக்கண்ட், இந்தவாலி பகுதிகளில் சோலார் தகடுகள் பொருத்தும் பணி,மின்மாற்றி நிலையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏறத்தாழ 160 டன் எடையைத் தாங்கும் அளவுக்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இயந்திரங்களில் பழுது ஏற்பட்டால் படகுகள் மூலம் கரைக்கு கொண்டு வந்து, சரி செய்ய முடியும்என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

செலவு குறைவு: தரைப் பகுதியைக் காட்டிலும், தண்ணீரின் மீது சோலார் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க செலவு மிகவும் குறைவு. எனவே, மத்திய பிரதேச மாநிலத்தில் 1200 கி.மீ. பயணிக்கும் நர்மதா நதியில்மாநில அரசு ஓராண்டு காலமாக ஆய்வு மேற்கொண்டது. மழைப்பொழிவு, காற்றின் வேகம், முதலைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து, ஓம்காரேஷ்வர் அணைப் பகுதியில் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதை முன்மாதிரியாகக் கொண்டு, பல்வேறு மாநிலங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இரண்டு கட்ட பணிகளும் முடிவடைந்து 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கும்போது, இதுவே உலகின் மிகப்பெரிய மிதக்கும் சோலார் மின் உற்பத்தி நிலையமாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழர்களின் பங்கு... இந்த மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட தமிழர்கள் ஈடுபட்டு வருகின்றர். குறிப்பாக, திட்டத்தை செயல்படுத்தும் தனியார் நிறுவனங்களில் மேலாளர்கள், பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் தமிழர்கள் பணியாற்றுகிறார்கள்.

எல் அண்டு டி நிறுவன தலைமை திட்ட அதிகாரியாகப் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த லாரன்ஸ் தனராஜ் கூறும்போது, "உலகின் பெரிய மிதக்கும் சோலார் மின் உற்பத்தி நிலையம் உருவாக்கும் திட்டத்தில் தமிழர்களும் பங்கு வகிப்பது பெருமைக்குரியது. தமிழகத்திலும் இதுபோல ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. எனவே, மத்திய, மாநில அரசுகள் இதுபோன்ற திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்