பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரின் விடுதலை ரத்து: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது செல்லாது. இரு வாரங்களில் 11 பேரும் சிறையில் சரண் அடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2002 பிப்.27-ம் தேதி குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில் 59 கரசேவகர்கள் உயிரிழந்தனர். 48 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து குஜராத் முழுவதும் கலவரம் வெடித்தது. கோத்ராவில் இருந்து 50 கி.மீ. தொலைவில் தாகோத் நகர் அருகில் உள்ள ரந்திக்பூர் கிராமத்தில் முஸ்லிம்கள் வசித்த பகுதியில் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. அப்போது பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 6 பேரை காணவில்லை. அவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2004-ல் 19 பேர் கைது செய்யப்பட்டனர். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கு மும்பையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 2008-ல் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை மும்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. மும்பை, நாசிக் சிறைகளில் 9 ஆண்டுகள் இருந்த 11 பேரும் பின்னர் குஜராத்தின் கோத்ரா சிறைக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில் 14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த இவர்களுக்கு குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு வழங்கியது. இதன்படி 11 பேரும் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதே விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த சுபாஷினி அலி, செய்தியாளர் ரேவதி, லக்னோ பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ரூப் ரேகா, திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த மஹுவா மொய்த்ரா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை நீதிபதிகள் நாகரத்னா, உஜ்ஜல் புயான் அமர்வு விசாரித்தது.அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில் கூறியிருப்பதாவது: பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கு மகாராஷ்டிராவில் நடைபெற்றது. எனவே தண்டனை குறைப்பு, முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக முடிவெடுக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் மகாராஷ்டிர அரசு முடிவெடுப்பதுதான் பொருத்தமானது. குற்றவாளிகளின் தண்டனை குறைப்பு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட விசாரணை நீதிபதி, சம்பந்தப்பட்ட மாநிலத்தின் காவல் துறை (மகாராஷ்டிரா) தலைவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும். 11 பேரின் விடுதலையில் நீதிபதி, காவல் துறை தலைவரிடம் ஆலோசனை பெறப்படவில்லை. எனவே 11 குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்கிறோம். அவர்கள் 2 வாரங்களுக்குள் சரண் அடைய வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து வழக்கறிஞர்கள் கூறும்போது, “பில்கிஸ் பானு வழக்கில் ஜஸ்வந்த், கோவிந்த்,சைலேஷ் பட், ராதேஷியாம் ஷா, பிபின் சந்திர ஜோஷி, கேசர்பாய், பிரதீப், பகாபாய், ராஜுபாய், மிதேஷ் பட், ரமேஷ் ஆகிய 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அவர்கள் 11 பேரும் 2 வாரங்களில் கோத்ரா சிறையில் சரண் அடைய வேண்டும். இந்த தீர்ப்பை எதிர்த்து 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. கோத்ரா சிறையில் அடைக்கப்பட்ட பிறகு சில காலம் கழித்து 11 பேரும் மகாராஷ்டிர அரசிடம் தண்டனை குறைப்பு கோரி மனு அளிக்கலாம். இதுதொடர்பாக மகாராஷ்டிர அரசு முடிவெடுக்கலாம் என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

38 mins ago

இந்தியா

21 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்