மக்களவைத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்திக்கு பதில் ராகுல் காந்தி போட்டி?

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதற்கு முன்பாக அரசியல் கட்சிகள் தங்கள் தொகுதிகளில் பிரச்சாரங்களை துவக்கத் தயாராகி வருகின்றன. இவற்றில் முக்கியத் தலைவர்கள் போட்டியும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸின் முன்னாள் தேசியத் தலைவரான சோனியா காந்தி (78), கடந்த 2004 முதல் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் போட்டியிட்டு வென்று வருகிறார். முதுமை காரணமாக பிரச்சாரக் கூட்டங்களை குறைத்துக் கொண்ட இவர், தற்போது தேர்தல் போட்டியில் இருந்தும் விலக விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால் அவரது ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் எனப் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

சோனியா காந்தி முதன்முறையாக கடந்த 1999-ல் கர்நாடகாவின் பெல்லாரி மற்றும் உ.பி.யின் அமேதியில் போட்டியிட்டு வென்றிருந்தார். இதில் பெல்லாரி எம்.பி. பதவியை ராஜினாமா செய்த அவர் அமேதி எம்.பி. பதவியில் தொடர்ந்தார்.

2004 தேர்தலில் முதன்முதலாகக் களம் இறங்கிய தனது மகன் ராகுலுக்காக அவர் அமேதியை விட்டுக் கொடுத்தார். பிறகு அருகிலுள்ள மற்றொரு காங்கிரஸ் களமான ரேபரேலிக்கு மாறினார். இந்த தொகுதியில் குறைந்தது 3 லட்சம் வாக்குகளில் வென்று வந்தார். இந்த வாக்கு வித்தியாசம் கடந்த 2019 தேர்தலில் 1.67 லட்சமாக குறைந்தது. எனினும் இந்த எண்ணிக்கையும் அதிகம் என்பதால் ரேபரேலியில் ராகுல் போட்டியிடும் வாய்ப்புகள் தெரிகின்றன.

கடந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல், கேரளாவின் வயநாடு எம்.பி.யானார். அவர் 3 முறை வென்ற அமேதியில் மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானியிடம் தோல்வியுற்றார். இதனால் காங்கிரஸுக்கு உ.பி.யில் செல்வாக்கும் குறைந்தது. எனவே வரும் தேர்தலில் அவர் வயநாட்டுடன் ரேபரேலியிலும் போட்டியிடும் திட்டம் உள்ளதாகத் தெரிகிறது.

ரேபரேலி இல்லை என்றால் அதில் சகோதரி பிரியங்காவும், அமேதியில் மீண்டும் ராகுலும் போட்டியிடும் வாய்ப்புகள் உள்ளன.காந்தி குடும்பத்தின் சொந்த மாநிலமான உ.பி.யில் பிரியங்காவுக்கு ஒரு காலத்தில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அப்போது தேர்தல் போட்டிக்கு கட்சியினரின் அழைப்பை பிரியங்கா மறுத்து விட்டார். இந்தமுறை அவர், உ.பி.யில் அமேதிஅல்லது ரேபரேலியுடன் தெலங்கானாவிலும் ஒரு தொகுதியை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.

தேர்தல் போட்டியிலிருந்து சோனியா விலகினால், உ.பியில் காங்கிரஸ் ஒன்றுமில்லாமல் போகும் அச்சமும் கட்சித் தலைவர்களுக்கு உள்ளது. ஏனெனில், 2009-ல் 22 எம்.பி.க்கள் பெற்ற காங்கிரஸுக்கு 2014-ல் 2, 2019-ல் ஒன்று மட்டுமேகிட்டின. இதனால் சோர்வடைந்த உ.பி. காங்கிரஸின் உத்வேகத்திற்காக சோனியாவை போட்டியில் தொடரச் செய்ய கட்சியில் அழுத்தம் தொடர்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE