3 பேர் உயிரிழந்த விவகாரம்: குற்றம் செய்தவர்கள் தப்ப முடியாது - காஷ்மீர் ஆளுநர் சின்ஹா உறுதி

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ராணுவத்தால் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள், யாரும் தப்ப முடியாது என ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உறுதி தெரிவித்துள்ளார்.

ஜம்மு பூஞ்ச் மாவட்டத்தின் டோபா பிர் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேரை பாதுகாப்பு படையினர் பிடித்துச் சென்று அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உறுதியளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம், பொதுமக்களின் நம்பிக்கையை பேணுவதை நான் உறுதி செய்வேன். நீதிமன்றம் மூலமாக ராணுவமும் விசாரணையை தொடங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் காவல் துறை இதுதொடர்பாக முதல் தகவலறிக்கை பதிவு செய்துள்ளது. சட்டம் தன் கடமையை செய்யும். தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்றார்.

ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் டிசம்பர் 21 அன்று நடத்திய தாக்குதலின்போது 4 வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள டோபா பிர் கிராமத்தைச் சேர்ந்த 9 பேரை பாதுகாப்பு படையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இவர்களில், சஃபீர் அகமது, ஷபிர் அகமது மற்றும் முகமது ஷெளகத் ஆகிய மூன்று பேர் விசாரணையின்போது சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த 5 பேர் ராஜெளரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE