இந்தியா மற்றும் உலக அளவில் தமிழை வளர்க்கும் நிறுவனமாக செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்(சிஐசிடி) இருப்பதாக அதன் இயக்குநரான முனைவர். இரா.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். மத்திய கல்வித்துறையின் கீழ் செயல்படும் சிஐசிடி, காசி தமிழ் சங்கமம்-2-ல் கலந்து கொண்டது குறித்து வாரணாசியில் ‘இந்து தமிழ் திசை’ எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு:
டிசம்பர் 30-ல் முடிந்த காசித் தமிழ்ச் சங்கமம்-2 மீதானத் தங்கள் பார்வை என்ன? வாரணாசியின் இரண்டாவது சங்கமத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களோடு பொதுமக்களும் பங்கேற்றனர். தொன்மையான நம் கலாச்சார நாகரிகங்களை பிரதிபலிக்கும் இத்தகைய கலை நிகழ்வுகள், உத்தரப்பிரதேசவாசிகள் தமிழர்களை பற்றி அறியும் வாய்ப்பாக அமைந்தது. அதேபோல், உ.பி. மக்களிடம் பழகி அவர்களைப் பற்றி தமிழர்கள் அறியும் வாய்ப்பாகவும் இருந்தது. இதன்மூலம், அங்கு பக்தர்களாகவும், சுற்றுலா பயணிகளாகவும் வரும் தமிழர்களின் மதிப்பு உயர்ந்திருப்பதாக காசி வாழ் தமிழர்கள் தெரிவித்தனர்.
இரண்டு சங்கமங்களிலும் பிரதமர் தங்கள் நிறுவனத்தின் பதிப்புகளையே வெளியிட்டாரே? திருக்குறளின் கருத்துகளை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கத்தில், பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கும் பணியை சிஐசிடி செய்கிறது. நமது பிரதமர் எங்கு சென்றாலும் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசி வருகிறார். முதல் சங்கமத்தில் 13 மொழிகளில் மொழிபெயர்த்த திருக்குறளை அவர் வெளியிட்டு தமிழுக்கு பெருமை சேர்த்தார்.
இந்த சங்கமத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் 46 தமிழ் நூல்களை 107 தொகுதிகளாக வெளியிட்டார். எளிய உரையில் இந்திய மொழிகளில் முதன்முறையான பிரெய்லி நூல்கள் எங்கள் நிறுவனப் பதிப்பு ஆகும். ரூ.1 கோடி மதிப்பிலான இந்நூல்கள் அனைத்தும் இலவசமாக விநியோகிக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
இத்துடன் புதியதாக மேலும் 15 மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்துள்ளோம். குடியரசு தலைவர் மற்றும் பிரதமரின் தமிழகப் பயணங்களில் அவர்களுக்கு, நம் முதல்வர் மற்றும் ஆளுநர் நம் நிறுவனப் பதிப்புக்களையே பரிசளிக்கும் அளவிற்கு எங்கள் முக்கியத்துவம் உயர்ந்துள்ளது.
தங்களது இந்தி உள்ளிட்ட இதர மொழிபெயர்ப்பு நூல்களுக்கு வரவேற்பு எப்படி உள்ளது? 2022-ல் காசி தமிழ்ச் சங்கமத்தில் திருக்குறளின்மொழிபெயர்ப்புகளை பிரதமர் வெளியிட்ட பின், இந்தி திருக்குறள் 500 தொடர்ந்து, இரண்டாம் பதிப்பாக அதன் 1000 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. இதுவன்றி, உருது, சம்ஸ்கிருதம், அரபிமொழி திருக்குறள்களும் விற்றுத் தீர்ந்தன. இந்த அளவிற்கு வடமாநில மக்கள் திருக்குறளை விரும்பி படிப்பது தமிழுக்குப் பெருமை சேர்ப்பதாக உணர்கிறேன்.
சிஐசிடியால் இந்தியில் வெளியிடப்பட்ட தொல்காப்பியம் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்று விற்பனையாயின. மேலும் அவர்கள் தமிழின் முக்கியமான காப்பியங்கள், சங்க இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகள் குறித்து ஆவலாக கேட்டறிந்தனர். அவர்கள் இதர தமிழ் காப்பியங்களின் மொழிபெயர்ப்புக்காக காத்திருப்பதாக கூறியது பெருமையாக இருக்கிறது.
2 தமிழ் சங்கமங்களியில் கலந்து கொண்டதில் சிஐசிடிக்கு கிடைத்த பலன்கள் என்ன? இதில் பங்கேற்ற மாணவர்களும் மக்களும் ஆர்வமுடன் தமிழ் மொழி குறித்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி சிஐசிடி அரங்கத்தில் கேட்டறிந்தனர். இதன் மூலம், இரண்டு சங்கமங்களின் பலனால் தமிழ்க் கலாச்சாரம், தமிழக வரலாறு மற்றும் தமிழ் மொழியின் மீதான மதிப்பு, உ.பி. மக்களிடையே உயர்ந்து வருவது வியப்பை அளித்தது. இதனால் இந்தியாவில் வடக்கே உள்ள பல்கலைக்கழகங்களில் பல்வேறு மொழிகளில் ஆய்வு செய்து வரும் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் தமிழ் மொழி மற்றும் இலக்கியங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கும் ஆய்வு செய்வதற்கும் செம்மொழி நிறுவனம் பாலமாகி உள்ளது.
இதை மேலும் ஊக்குவிக்க, நம் நிறுவனம்இதர மொழி மாணவர்களுக்காக இலவசமாகத் தங்கும் இடம், உணவுடன் 10 நாள் பயிலரங்கங்கள் நடத்துகிறோம். இவற்றில், டெல்லி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகங்களிலிருந்து பல துறைகளை சேர்ந்த ஆய்வு மாணவர்கள் பயன் பெற்றனர். இம்மாதம் கொல்கத்தா சாந்திநிகேதன் பல்கலைக்கழகத்திலிருந்து 35 மாணவர்கள் வருகிறார்கள். அடுத்தடுத்த மாதங்களில் பல்வேறு மத்தியப் பல்கலைக்கழகங்களில் இருந்து ஆய்வு மாணவர்கள் வர இருக்கின்றனர். இவ்வாறு, இந்தியா முழுவதிலும் தமிழை வளர்ப்பதில், ஒரு மத்திய அரசின் நிறுவனம் பங்கெடுப்பது சிறப்பு.
வெளிநாடுகளிலும் செம்மொழியானத் தமிழை வளர்ப்பதில் சிஐசிடியின் பங்கு என்ன? ஜெர்மனி, மலேசியா மற்றும் அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் எங்கள் நிறுவனத்தில் வந்து தங்கி தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் மற்றும் காப்பியங்கள் குறித்து ஆய்வு செய்கின்றனர். சிஐசிடி நடத்திய கருத்தரங்குகள், பயிலரங்குகளில் அவர்கள் பயிற்சிகளையும் பெற்று சென்றுள்ளனர். செவ்வியல் இலக்கியங்கள் 41 முழுமையாக ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு உலக அளவில் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
பல்வேறு அயலக மொழிகளில் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் திருக்குறளை மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறோம். சிஐசிடி ஒரு மத்திய அரசின் நிறுவனமாக இருப்பதால், சிஐசிடியின் பதிப்புகள் வெளிநாடுகளில், இந்திய அரசின் அதிகாரப்பூர்வ நூல்களாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் தமிழின் தொன்மை, சிறப்பு, வளம், பண்பாடு, நாகரிகம் போன்றவற்றை உலக மக்கள் அறிந்து கொள்ள செம்மொழி நிறுவனம் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது.
சிஐசிடியில் வரவிருக்கும் நூல்கள் பற்றி சுருக்கி கூற முடியுமா? தற்போது சிஐசிடியில் பல்வேறு ஆய்வுப்பணிகள் மற்றும் மொழிபெயர்ப்பு பணிகள் அதிகமாக நடைபெறுகின்றன. குறிப்பாக நமது சங்க இலக்கியங்களை முழுமையாக பல்வேறு இந்திய மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம். ஓரிரு மாதங்களில் இந்தியில் மேலும் 40 நூல்கள் வரவுள்ளன. கன்னடத்தில் 20, தெலுங்கில் 40, மலையாளத்தில் 20, சம்ஸ்கிருதத்தில் 10 நூல்கள் வெளியிடப்படவுள்ளன.
தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்தின் இலக்கண அமைப்பை பலரும் அறிந்து, ஆய்வு செய்வதற்கு வசதியாக, இந்திய மற்றும் உலகின் முன்னணியான 20 மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன. இவற்றில் கன்னடம், மலையாளம், அஸ்ஸாமி, அரபி, உருது, பெங்காலி ஆகிய மொழிகளில் பணிகள் முடிக்கப்பட்டு அச்சுக்குத் தயாராகி வருகின்றன.
பவுத்த காப்பியமான மணிமேகலை 18 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பவுத்த சமயம் பின்பற்றும் நாடுகளில் பேசப்படும் மொழிகளில் இக்காப்பியத்தை மொழிபெயர்க்கும் போது தமிழரின் பண்பாடு, தமிழ் மொழியின் சிறப்பு, அழகுணர்வு உள்ளிட்டவை அந்தந்த நாடுகளில் பரவும். தற்போது 6 மொழிகளில் வெளியிடப்பட்டன. மீதி உள்ளவை விரைவில் வெளியிடப்படும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago