“உலகின் பார்வை இந்தியா பக்கம் திரும்பி இருக்கிறது” - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: சர்வதேச அளவில் நடைபெறும் உரையாடல்கள் இந்தியாவின் பக்கம் திரும்பி இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற வளர்ச்சி அடைந்த பாரதமே லட்சியம் எனும் யாத்திரையில் பங்கேற்று ஜெய்சங்கர் பேசியது: "வெளியுறவுத் துறை அமைச்சர் என்பதால் நான் உலகம் முழுவதும் செல்கிறேன். உலக நாடுகள் இன்று இந்தியா குறித்தே பேசுகின்றன. இந்தியாவால் எப்படி இவ்வாறு செயல்பட முடிகிறது என்று கேட்கிறார்கள். 10, 20, 30 ஆண்டுகளுக்கு முன்பும் இதே இந்தியாதான் இருந்தது. இந்தியாவில் என்ன மாறி இருக்கிறது என்றால், அதன் கண்ணோட்டம் மாறி இருக்கிறது.

நம்மிடம் தற்போது ஆதார் இருக்கிறது. வங்கிக் கணக்கும் இருக்கிறது. இரண்டையும் இணைத்ததன் மூலம் அரசு நிர்வாகம் மட்டும் மாறவில்லை. சமூகமும் மாறிவிட்டது. இவற்றை மொபைல் ஃபோனுடன் இணைத்துள்ளதால் மக்களுக்கான நேரடி பலன்கள் அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. உண்மையிலா நாம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறோம்.

இந்திய மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடி மிகச் சிறந்த பணிகளை ஆற்றி இருக்கிறார். இந்தப் பணிகள் தொடரும்போது வளர்ச்சி அடைந்த பாரதம் உருவாகும். சுகாதாரம், குடிநீர், மின்சாரம், வீடு, கல்வி என பலவற்றில் இருந்த பிரச்சினைகளை மக்கள் இன்று தீர்த்திருக்கிறார்கள். வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் போன்ற மாற்றம் இந்தியாவில் ஏற்பட்டிருக்கிறது.

அரசுப் பணியில் நான் 46 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளாக அமைச்சராக பணியாற்றி இருக்கிறேன். உண்மையில் இந்த 5 ஆண்டுகள் எனக்கு மிகவும் திருப்திகரமான ஆண்டுகள். ஏனெனில், அரசின் செயல்பாட்டில் முழுமையான மாற்றத்தை தற்போது நான் பார்க்கிறேன். நரேந்திர மோடி அரசில் உயரதிகாரிகள் மிகவும் கவனமாக செயல்படுகிறார்கள். வங்கிகள் மக்களுக்கு நட்பானதாக மாறி இருக்கிறது" என்ரு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் வி.முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE