கர்நாடகாவில் பள்ளி மதிய உணவில் இனி சிறுதானிய சிற்றுண்டி: முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடகாவில் பள்ளி மதிய உணவு மற்றும் இந்திரா கேண்டினில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

கர்நாடக வேளாண்துறையின் சார்பில் சிறுதானிய மற்றும் இயற்கை வேளாண் சர்வதேச வணிக கண்காட்சி பெங்களூருவில் சனிக்கிழமை தொடங்கியது. நாளை வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியை கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்தார். இதில் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே, கர்நாடக வேளாண்துறை அமைச்சர் செலுவராய சுவாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கண்காட்சியில் முதல்வர் சித்தராமையா பேசிய‌து: “கர்நாடக அரசு தகவல் தொழில் நுட்பத்துறை மட்டுமல்லாமல் சிறுதானிய மற்றும் இயற்கை விவசாய துறைக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. நாட்டிலே கர்நாடகா மட்டுமே சிறுதானிய கண்காட்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது. நமது பாரம்பரிய சிறுதானிய விவசாயத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்ல கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது.

இந்தக் கண்காட்சியின் மூலம் இயற்கை விவசாயம் மற்றும் சிறுதானிய வேளாண்மையை உள்நாட்டு விவசாயிகள் மத்தியிலும் பிரபலப்படுத்தி வருகிறது. சிறுதானிய விவசாயிகளையும், அதனை விநியோகிக்கும் நிறுவனங்களையும் ஊக்குவிக்கும் திட்டங்களை உருவாக்கியுள்ளது. இந்த பன்னாட்டு கண்காட்சியில் தமிழகம், பஞ்சாப் உள்ளிட்ட 30 மாநிலங்களும், அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய 10க்கும் மேற்பட்ட வெளிநாடுகளும் அரங்கம் அமைத்துள்ளன.

கர்நாடக மக்கள் சிறுதானியமான கேழ்வரகை அதிகம் உட்கொள்கின்றனர். இதனால் கர்நாடக மக்களின் ஆரோக்கியமும் ஆயுட்காலமும் சிறப்பாக இருக்கிறது. குறைந்த அளவிலான நீரை வைத்தே சிறுதானிய வேளாண்மையை சிறப்பாக மேற்கொள்ள முடியும். சிறுதானியங்களை அதிகளவில் உட்கொண்டபோது மக்களுக்கு இந்த அளவுக்கு நோய்கள் வரவில்லை.

கர்நாடக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளியில் மதிய உணவில் சிறு தானிய சிற்றுண்டி வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இதேபோல அரசு நடத்தும் இந்திரா கேண்டீனிலும் சிறுதானியத்தில் தயாரிக்கப்பட்ட உணவு வழங்கப்படும். இதன்மூலம் மக்கள் பயன்பெறுவதுடன், சிறுதானிய விவசாயிகளும் பயனடைவார்கள்” என்று சித்தராமையா தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE