உ.பி.யில் 35 வழக்குகளில் சிக்கியவர் சுட்டுக்கொலை: அரசியல் கட்சியில் இணைந்து மீண்டும் தேர்தலில் போட்டியிட விரும்பியவர்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் 35 குற்ற வழக்குகளில் சிக்கியதால் தலைக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட வினோத் உபாத்யாய் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் உ.பி.யின் அரசியல் கட்சியில் இணைந்து மீண்டும் தேர்தலில் போட்டியிட விரும்பியதாகத் தெரியவந்துள்ளது.

உ.பி.யின் கிழக்குப் பகுதியில் குற்றச்செயல் கும்பலின் தலைவனாக இருந்தவர் வினோத் உபாத்யாய். இவரை தேடுவதற்காக உ.பி.யின் சிறப்பு படையான எஸ்டிஎப் அமர்த்தப்பட்டிருந்தது. இதன் துணை எஸ்.பி.யான தீபக் குமார் சிங் தலைமையிலான படையால் தீவிரமாகத் தேடப்பட்ட வினோத், உ.பி.யின் சுல்தான்பூரில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்றுமுன்தினம் நள்ளிரவு சுற்றி வளைக்கப்பட்ட வினோத், துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோட முயன்றார். அப்போது அவர் எஸ்டிஎப் படையால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டு, அதே இடத்தில் இறந்தார்.

உ.பி.யின் கிழக்கு மாவட்டங்களான கோரக்பூர், பஸ்தி, சந்த் கபீர் நகர் மற்றும் லக்னோவில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார் வினோத். அவர் மீது, கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், பணம்பறித்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 35 வழக்குகள் பதிவாகிஉள்ளன. பாஜக அரசின் முதல்வராக ஆதித்யநாத் அமர்ந்தபின், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவரைப் பற்றிய தகவலுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.

அயோத்தியை சேர்ந்த வினோத்திற்கு அப்பகுதியில் பல குற்றங்கள் செய்திருந்த ஜீத் நாராயண் மிஸ்ரா என்பவருடன் 2004-ல்மோதல் ஏற்பட்டது. இதில், வினோத்தின் கன்னத்தில் அறைந்தார் ஜீத் நாராயண்.

இதனால் அவமானம் அடைந்த வினோத், சிறை சென்றுவிட்ட ஜீத் நாராயண் விடுதலையானால் பழிதீர்க்க காத்திருந்தார். ஒரு வருடம் கழித்து விடுதலையான ஜீத் நாராயணை சந்த் கபீர் நகரின் பக்கீரா எனும் இடத்தில் சுட்டுக் கொன்றார். அப்போது முதல் வினோத்தின் குற்ற நடவடிக்கைகள் தொடர்ந்தன. உ.பி. இளைஞர்கள் சிலரை சேர்த்து, ஒரு கும்பலை அமைத்து அதற்கு தலைவரானார் வினோத்.

இதனிடையே, கடந்த 2007-ல்அரசியலில் குதித்த வினோத் முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். கோரக்பூர் மாவட்ட கட்சிப் பொறுப்பை பெற்றவருக்கு அதே வருடம் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. 2 வருட அரசியல் வாழ்க்கைக்கு பின் மீண்டும் தலைமறைவானார் வினோத். பிறகு மீண்டும் தொடர்ந்த அவரது குற்ற நடவடிக்கைகளால் உ.பி.யில் தேடப்பட்டு வந்த 61 முக்கிய குற்றவாளிகளில் 10-வது இடத்தில் இருந்தார்.

வினோத்தின் குற்ற நடவடிக்கைகள், அவரது என்கவுன்ட்டரால் முடிவுக்கு வந்துள்ளன. முன்னதாக தனது குற்றங்களில் இருந்து தப்பி செல்வாக்கை தக்க வைத்து கொள்ள தேர்தலில் போட்டியிட்டு பதவிக்கு வர முயன்றதாகவும் இதற்காக உ.பி.யின் முக்கிய அரசியல் கட்சிகளுடன் அவர் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் எஸ்டிஎப் விசாரணையில் தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE