மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த காங்கிரஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தாக்கப்பட்டதை அடுத்து, மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க காங்கிரஸ் பொறுப்பாளருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "ஆளும் கட்சியைச் சேர்ந்த குண்டர்கள் அமலாக்கத் துறை அதிகாரிகளை தாக்கி இருக்கிறார்கள். மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு இல்லை என்பதை இது தெளிவுபடுத்துகிறது. இன்று அவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். நாளை அவர்கள் கொல்லப்பட்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். மேற்கு வங்கத்தில் உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்" என தெரிவித்துள்ளார்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் கருத்துக்கு பதில் அளித்துள்ள திரிணமூல் காங்கிரஸ் தலைவர் குணால் கோஷ், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பாஜக ஏஜெண்ட் என விமர்சித்துள்ளார்.

பின்னணி: மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளி என்ற கிராமத்தில் வசிக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஒன்றிய அளவிலான தலைவர்களின் வீடுகளில் சோதனை செய்ய அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது, அதிகாரிகள் சென்ற வாகனத்தை மறித்து தாக்கிய ஆளும் கட்சியினர், அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE