ராஜஸ்தானில் இலாகா அறிவிப்பு - முதல்வர் பஜன்லால் சர்மாவுக்கு 8 துறைகள்

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அமைச்சரவை இலாகாக்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் பஜன்லால் உள்துறை உள்பட 8 துறைகளை தன் வசம் வைத்துள்ளார்.

ராஜஸ்தானில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டார். துணை முதல்வர்களாக தியாகுமாரியும், பிரேம் சந்த் பைரவாவும் தேர்வு செய்யப்பட்டனர். அதோடு, 22 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கான துறைகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமைச்சரவை இலாகா தொடர்பாக முதல்வர் பஜன்லால் அளித்த புரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதல்வர் பஜன்லால் சர்மா உள்துறை, கலால் வரி, ஊழல் ஒழிப்பு உள்பட 8 துறைகளை தன் வசம் வைத்துள்ளார். துணை முதல்வர் தியாகுமாரிக்கு நிதித்துறை, சுற்றுலா, பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை உள்ளிட்ட 6 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்றொரு துணை முதல்வரான பிரேம் சந்த் பைரவாவுக்கு உயர்கல்வி, ஆயுர்வேதா, சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை உள்ளிட்ட 6 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முன்னாள் மத்திய அமைச்சரான ராஜ்யவர்தன் ரத்தோருக்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் கிம்சாரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக மதன் திலாவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில், தேர்தல் நடைபெற்ற 199 தொகுதிகளில் 115 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE